நவீனங்களால் ஆபத்து... பெண் விலை வெறும் 999..? நடிகர் ராஜ் கமல் சொல்லும் ரகசியம் என்ன..?
டூயட் பாடி, காதலியை கட்டிப்பிடித்து, மரத்தை சுற்றி ஆடுவதில் விருப்பம் இல்லை. நிறைய ஃபெர்பாமன்ஸ் கொடுக்கிற வேடத்தில் நடிக்க வேண்டும்.
ஒவ்வொரு நாளும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தொழில்நுட்பம் ஒருபுறம் வளர்சிக்கு உதவி வரும் அதே வேளை பலருக்கு ஆபத்தையும் விளைவிக்கிறது.
தற்போது நவீன சாதனங்களால் இளம் பெண்களை தவறாக சித்தரித்து அவர்களை மிரட்டி, பணம் பறிக்கும் ஒரு மோசமான கும்பல் உலகெங்கும் உலாவி வருகின்றனர். பெண்களை குறி வைத்து அவர்களின் கைபேசிக்குள் எப்படியெல்லாம் நுழைகிறார்கள் என்பதை வெட்ட வெளிச்சமாக தோலுரித்துள்ள திரைப்படம் சமீபத்தில் வெளியான “பெண் விலை 999 மட்டுமே” திரைப்படம்.
வரதாஜ் இயக்கத்தில், ராஜ்கமல், மது, ஷ்வேதா பாண்டி மற்றும் பலர் நடித்து வெளியாகி அனைவரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. தலைப்பே வித்தியாசமாக இருக்க, இந்தப்படத்தில் கதாநாயகனாக இருந்தும் நெகட்டிவ் ரோலில் நடிக்க துணிந்தது எப்படி என இப்படத்தின் நாயகன் ராஜ்கமலிடம் பேசினோம். ‘’ பெண்விலை 999 படம் 76 தியேட்டர்களில் வெளியானது. 7 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. இதுவே எங்களுக்கு போதுமான வெற்றிதான். பொதுவாக சின்னத்திரையில் இருந்து வருபவர்கள் மட்டுமல்ல. எந்த ஹீரோவும் நெகட்டிவ் இமேஜை உருவாக்கிக் கொள்ள மாட்டார்கள். ஆனால் எனக்கு ஹீரோ இமேஜே வேண்டாம். கதைக்கு தேவைப்படுகிற பாத்திரமாகவே இருக்க நினைக்கிறேன்.
\
எனது குடும்பமே கலைக் குடும்பம் தான். எனது அப்பாவின் தந்தை அதாவது எனது தாத்தா நடராஜ் நாடார் ராஜ் கலாமந்தரில் இருந்தவர். பின்னர் ராஜ் கமல் செட்டியார் என தனது பெயரை மாற்றிக் கொண்டார். அப்படி வந்தது தான் எனது பெயர்’’ என்கிற ராஜ்கமல் பல சின்னத்திரை தொடர்களில் நடித்திருக்கிறார். சன் டிவியில் வரும் அபியும் நானும் தொடரில் அபிக்கு அப்பாவாக சரவணன் கேரக்டரில் நடித்து வருபவர் தான் இந்த ராஜ் கமல்.
‘’நான் ஹீரோவாகவே நடிக்க மட்டும் ஆசைப்படவில்லை. டூயட் பாடி, காதலியை கட்டிப்பிடித்து, மரத்தை சுற்றி ஆடுவதில் விருப்பம் இல்லை. நிறைய ஃபெர்பாமன்ஸ் கொடுக்கிற வேடத்தில் நடிக்க வேண்டும். அதற்கு நெகட்டிவ் கேரக்டர் தான் செட் ஆகும். உதாரணத்திற்கு பகத் பாசிலை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் ஹீரோவாக நடித்ததைவிட நெகட்டிவ் கேரக்டர்களில் தான் அசத்தி வருகிறார். புஷ்பா படத்தில் அனைவருமே கலக்கி இருப்பார்கள். ஆனால் கடைசி 10 நிமிடங்கள் வந்தாலும் அனைவரை விடவும் பயங்கர ஸ்கோர் செய்திருப்பார் பகத் பாசில். அந்த 10 நிமிடங்களே வந்தாலும் ஒட்டுமொத்தமாக அவர் மட்டுமே மனதில் நிற்பார்.
விஜய்சேதுபதிக்கு என்று ஒரு இமேஜ் இருக்கிறது. ஆனால் அவர் எந்த ரோல் கொடுத்தாலும் நடித்து அசத்துவார். மாஸ்டர் படத்தில் விஜய் ஹீரோவாக இருந்தாலும் விஜய் சேதுபதி நடிப்பு தான் பலராலும் பாரட்டப்பட்டது. இப்படி அவர்களை போல நெகட்டிவ் ரோல்களில், ஃபெர்பாமன்ஸ் காட்டக்கூடிய பாத்திரங்களில் நடிக்கவே விரும்புகிறேன். கன்னடம், மலையாள சினிமாக்களில் நடிப்பை வெளிப்படுத்த கூடிய சினிமாக்கள் நிறைய வருகின்றன. அந்த மொழி சினிமாக்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.
அபியும் நானும் தொடர் சூர்யா டிவியில் மலையாளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. அங்கு எனது கேரக்டர் பெயர் சந்தோஷ் மேனன். ஐயப்பன் கோவிலுக்கு சென்றிருந்த போது அந்தப்பெயரை உச்சரித்து அழைத்து என்னை அங்குள்ள ரசிகர்கள் உற்சாகப்பட்டுத்தி விட்டார்கள். எனது மனைவி லதா ராவும் சின்னத்திரை நடிகைதான். திருமதி செல்வம் தொடரோடு நிறுத்திக் கொண்டார். மலையாளத்தில் ஏசியாநெட் சேனலில் ஒளிபரப்பான சுவாமி ஐயப்பன் தொடரில் ஐயப்பனின் தாயாக நடித்திருந்தார்’’ என்கிற ராஜ் கமலிடம் அடுத்து சின்னத்திரையா? அல்லது சினிமாவா? என கேட்டோம்.
சினிமாதான், இல்லை என்றால் சீரியல். என்னை நம்பி 8 பேர் இருக்கிறார்களே அவர்களை காப்பாற்ற வருமானம் வேண்டாமா? எனச் சொல்லி விட்டு எதார்த்தமாக சிரிக்கிறார்.