இயக்குனர் மிஷ்கின் 'துப்பறிவாளன்' படத்தைத் தொடர்ந்து, தற்போது இயக்கியுள்ள திரைப்படம் 'சைக்கோ' இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்து வருகிறார். மேலும் இதுவரை ஏற்று நடித்திராத, கண்தெரியாதவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தத்துரூபமாக இந்த படத்தில் நடிப்பதற்காக ஒரு சில பயிற்சிகளையும், உதயநிதி எடுத்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை அதிதி ராவ் மற்றும் நித்யா மேனன் ஆகிய இருவர் நடித்துள்ளனர்.  மேலும் சிங்கம்புலி, ஆடுகளம் நரேன், ரேணுகா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  இந்த படத்தை டபுள் மீனிங் ப்ரொடக்ஷன் சார்பாக தயாரிப்பாளர் அருண் மொழி மாணிக்கம். சைக்கோ திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில், ரகுநந்தன் என்பவர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு புது சிக்கலை உருவாக்கியுள்ளது. 

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், மிஷ்கின் தனது மகனை வைத்து படம் எடுப்பதாக கூறி ரூ.1 கோடி பெற்றதாகவும், ஆனால் அந்த கதையை உதயநிதி ஸ்டாலினை வைத்து எடுத்துவிட்டதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. மேலும் கொடுத்த பணத்தில் இருந்து பாதி தொகையை மட்டுமே திரும்ப செலுத்திய மிஷ்கின், மீதமுள்ள 50 லட்சத்தை திரும்ப தர உத்தரவிட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து விசாரித்த நீதிமன்றம் "சைக்கோ" படத்தை தயாரிக்கும் டபுள் மீனிங் புரொடக்‌ஷன்ஸ் மிஷ்கினுக்கு தர வேண்டிய சம்பள தொகையில் இருந்து, தயாரிப்பாளர் ரகுநந்தனுக்கு சேர வேண்டிய 50 லட்சத்தை கொடுக்க உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு மீண்டும் வரும் 20ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.