வாழ்நாளில் தன்னை இனிமேல் சின்மயிக்கு மேல் யாரும் அவமானப்படுத்திவிட முடியாது என்று நினைத்த வைரமுத்துவுக்கு ‘அதெல்லாம் ரொம்பக் கம்மி பாஸ். இன்னும் நீங்க அடையவேண்டிய அவமானங்கள் எவ்வளவோ இருக்கு’என்று அறிவிக்கும் விதமாக ’இனி நான் பாடலாசிரியராகப் போகிறேன். இனிமே இந்த சிங்கமுத்துவுக்கும் வைரமுத்துவுக்கும் தான் போட்டி’என்று அதகளமாக அறிவித்திருக்கிறார் காமெடி நடிகர் சிங்கமுத்து.

வடிவேலுவின் நீண்ட கால நெருக்கமான நண்பராக இருந்து அவருடன் பல படங்களில் காமெடிக் காட்சிகளில் கலக்கியவர் சிங்கமுத்து. ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வந்த சிங்கமுத்து வடிவேலுவுக்கு வாங்கித் தந்த சில நிலங்கள் வாயிலாக அவர் ஓவர் கமிஷன் அடித்துவிட்டதாக எழுந்த தகராறில் இருவரும் கொஞ்சகாலம் கட்டி உருண்டு பிரிந்தனர். அதன் பின்னர் வடிவேலு படங்கள் இல்லாமல் இருக்க, தனது மகன் வாசனை ஹீரோவாக வைத்து இரண்டு படங்கள் தயாரித்து திவாலானார்.

இந்நிலையில் தனது மகனை வைத்துத் திரும்ப படங்கள் தயாரிக்கக் களம் இறங்கியிருக்கும் சிங்கமுத்து வடிவேலு குறித்துப் பேசும்போது ‘தெய்வ வாக்கு’படத்தில் நானும் வடிவேலும் சேர்ந்து பணியாற்றத்துவங்கியபோது அவருக்கு 3000 சம்பளம். எனக்கோ 3,500. எனது எழுத்துத் திறமையைப்பார்த்து ஒரே ரூம்ல தங்குவோம்ணே என்று அழைத்துப்போய் எனது திறமையில் பனிரெண்டே வருடங்களில் எங்கோ போய்விட்டார். அவருக்கு நான் லட்சங்களில் வாங்கிக்கொடுத்த சொத்துக்கள் இன்று கோடிகளுக்குப் போய்க்கொண்டிருக்கின்றன. இடையில் தேவையில்லாமல் என்னைப் பகைத்துக்கொண்டதற்காக இப்போது வருத்தப்படுகிறார் என்று கேள்விப்பட்டேன்.

இடையில் சினிமா கொஞ்சம் டல்லடித்ததால் மீண்டும் ரியல் எஸ்டேட் தொழிலுக்குப் போய்விட்டேன்.தற்போது மீண்டும் எனது மகன் வாசனை வைத்து மீண்டும் இரு படங்களை தயாரிக்கவிருக்கிறேன். இம்முறை எனக்குப் போட்டி வடிவேலு அல்ல. பாடலாசிரியர் வைரமுத்து.யெஸ்...நான் எனது மகனை வைத்துத் தயாரிக்கவிருக்கும் ‘பாசக்காரக்கூட்டம்’,’கட்டழகன்’ ஆகிய இருபடங்களுக்கும் ஸ்டீபன் ராயல் என்பவரது இசையில் ’சின்னஞ்சிறு பூக்களும் சில்லென்று பூக்கிறதே’...’எத்தனை நாள்தான் ஆசையை நான் மறைப்பேன்’...என்று தொடங்கும் இரு பாடல்கள் உட்பட அத்தனை பாடல்களையும் எழுதியிருக்கிறேன். இனிமே பாடலாசிரியர்கள் மத்தியில வைரமுத்துவுக்கும் இந்த சிங்கமுத்துவுக்கும்தான் போட்டி’என்று எகத்தாளமாகச் சிரிக்கிறார் சிங்கமுத்து. அதாவது சிங்கம் ஒண்ணு புறப்பட்டதேன்னு சொல்றீங்க அப்பிடித்தானே?