பிரபல மலையாள காமெடி நடிகர் சசி கலிங்கா கடந்த ஓரிரு நாட்களுக்கு முன், கல்லீரல் பிரச்சனை காரணமாக மருத்துவ மனையில் திடீர் என உயிரிந்தார். இவருடைய மரணம் பல மலையாள ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. 

இதுவரை 250 திற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட, மேடை நாடகங்களில், நடித்து தன்னுடைய தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர், மூத்த மலையாள நடிகர் சசி கலிங்கா.

59 வயதான இவர் சமீப காலமாக கல்லீரலில் பிரச்சனை ஏற்பட்டதன் காரணமாக, அவதி பட்டு வந்த நிலையில், இவருடைய குடும்பத்தினர் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் இவரை அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். 

இந்நிலையில் இவர் சிகிச்சை பலன் இன்றி,  ஏப்ரல் 7 ஆம் தேதி உயிரிழந்தார். இவரின் திடீர் மரணம் குறித்து கேள்விப்பட்ட பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் தொடர்ந்து தங்களுடைய இரங்கலை தெரிவித்தனர்.

தற்போது இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இவருக்கு நேரில் அஞ்சலி செலுத்த கூட பலரால் வரமுடியவில்லை. பல முன்னணி நடிகர்களுடன் காமெடி வேடத்தில் நடித்துள்ள இவரின் இறுதி அஞ்சலியில் 3 ரோஜா மாலைகள் மட்டுமே போடப்பட்டதாகவும், வீடே வெறிச்சோடி காணப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.