படத்தில் இருக்கிறதோ இல்லையோ ‘கோமாளி’கதைத் திருட்டு சம்பந்தமான செய்திகள் காலையில் ஒன்றும் மாலையில் ஒன்று என்று ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்களாகப் போய்க்கொண்டிருக்கின்றன. கதை தன்னுடையது என்று ரூ 10 லட்சத்தைப் பெற்றுக்கொண்ட உதவி இயக்குநர் தற்போது கே.பாக்யராஜை பெருத்த ஏமாளியாக்கியிருப்பது இன்று மதியம் அம்பலமாகியுள்ளது.

சமீபத்தில் வெளியான ‘கோமாளி’ படம் நல்ல லைன் கிடைத்தும் சரியாக திரைக்கதை சிறப்பாக இல்லாத  காரணத்தால் பிசிறடித்த கதை ஊருக்கே தெரியும்.இந்நிலையில் படம் வெளியாக சில தினங்கள் முன்பு வழக்கமாக வரும் பஞ்சாயத்தான ‘இது என் கதை’ என்று எழுத்தாளர்கள் சங்கத்தில் புகார் சொன்ன ஆர்.பார்த்திபனின் உதவி இயக்குநர் கிருஷ்ணமூர்த்திக்கு அவர் சொன்னது சரிதானென்று தீர்ப்பு கூறி, தயாரிப்பாளரிடம் நஷ்ட ஈடும், டைட்டில் கார்டில் பெயரும் வர கே.பாக்யராஜ் வழிவகை செய்த கதையையும் ஊருலகம் அறியும்.

அந்த நஷ்ட ஈட்டுத் தொகை மட்டும் பத்து லட்சம் என்று உறுதி செய்தன ஊடகங்கள். இந்நிலையில் அந்த கிருஷ்ணமூர்த்தியும் அந்தக் கதைக்கு ஒரிஜினல் சொந்தக்காரர் இல்லை என்கிறது உலக சினிமா பட்சி. ‘கிக்கின் இட் ஓல்ட் ஸ்கூல்’ என்கிற அமெரிக்கப் படத்தில் இதே லைன் ஏற்கனவே எடுக்கப்பட்டு விட்டது.ஆக, அங்கிருந்து சுட்ட கதையை சுடாமலேயே பஞ்சாயத்து மூலம் பத்து லட்சம் பெற்று கோமாளி டீமையே கோமாளி ஆக்கிவிட்டார் அந்த புத்திசாலி உதவி இயக்குநர். பத்து லட்சம் நஷ்ட ஈடு கொடுக்கும் வரை கோமாளி டைரக்டர் அமைதிகாத்தது ஏன் என்பது தற்போது வரை விளங்காத கேள்வி.

உண்மை என்னவென்றால் இரண்டு பேருமே சுட்டது அந்தப்படத்திலிருந்துதான். கோமாளி இயக்குநரைவிட கிருஷ்ணமூர்த்தி இரண்டு வருடங்கள் முன்பு அதைச்சுட்டு பதிவு செய்துவிட்டார் என்பதுதான் அவரது பலம். இதில் கோமாளிகள் ஆனது கோமாளி டீம் மட்டுமல்ல, திரைக்கதை ஜாம்பவான் கே.பாக்யராஜும், ஆர்.பார்த்திபனும்தான்.நம்மவர்களின் உலக சினிமா அறிவு அப்படி..!நம் கவலை என்னவென்றால் இந்த விஷயம் ஒரிஜினல் இயக்குநரான ‘ஹார்வி க்ளேஸரு’க்குத் தெரிந்து அவரும் வந்து கே.பாக்யராஜிடம் முறையிட்டால் என்ன ஆகும் என்பதுதான்.