படப்பிடிப்பு பணிக்காக லொகேஷன் பார்க்க, கோழிக்கோடு பகுதிக்கு  சென்ற போது, ஒளிப்பதிவாளர் ராமச்சந்திர பாபு, மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரை விட்ட சம்பவம் திரையுலகினர் மத்தியில், மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, உள்ளிட்ட மொழி படங்களில் 125 இற்கும் மேற்பட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளவர் ராமச்சந்திர பாபு. இவர் படப்பிடிப்பு பணிக்காக லொகேஷன் பார்ப்பதற்காக கேரளாவில் உள்ள கோழிக்கோடு பகுதிக்கு சென்றுள்ளார்.

மயக்கம் அடைந்து கீழேயே விழுந்த இவரை, படக்குழுவினர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.  இந்த சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள செங்கல்பட்டு மாவட்டம்,  மதுராந்தகத்தில் பிறந்தவர் ராமச்சந்திர பாபு, சென்னை லயோலா கல்லூரியில் வேதியல் படித்து இளநிலை பட்டம் பெற்றார். பின்னர் திரையுலகின் மீதும், ஒளிப்பதிவு மீதும் கொண்ட ஆர்வத்தால்,  புனேவில் உள்ள இந்திய திரைத்துறை நிறுவனத்தில் சேர்ந்து திரைத் துறையில் இளநிலை பட்டம் பெற்றார். 

1971  ஆம் ஆண்டு ஒளிப்பதிவாளராக தன்னுடைய பணியை துவங்கிய ராமச்சந்திர பாபு இதுவரை 125  படங்களுக்கு மேல் பணியாற்றி உள்ளார். மலையாளத்தில், ஜான் ஆபிரகாம், பரதன், ஹரிஹரன் போன்ற இயக்குனர்கள் இயக்கத்தில் உருவான படங்களில் பணியாற்றி உள்ளார். தமிழில் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'பகல் நிலவு' படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

72 வயதாகும் இவர், பல்வேறு மொழிப்படங்களில் பணியாற்றினாலும், தன்னுடைய சொந்த ஊரான மதுராந்ததில் தான் வசித்து வருகிறார். இவரின் மறைவு,  திரையுலக சேர்ந்த பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ராமச்சந்திர பாபு, மறைவிற்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.