சின்மயி வைரமுத்து மீது பாலியல் ரீதியாக தனக்கு தொந்தரவு கொடுத்தார் என கூறியதும், வரிசையாக பலர் தங்களுக்கும் பல முறை கவிஞர் வைரமுத்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறி கோலிவுட் திரையுலகத்தையே அதிர வைத்தனர்.

இப்படி கூறப்பட்ட புகார்களுக்கு, ட்விட்டர் மூலம் பதில் அளித்த வைரமுத்து, அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. தன் மீதான குற்றச்சாட்டுகள் எல்லாம் முழுக்க முழுக்க பொய்யானது என வைரமுத்து முதல்முறையாக வாய்திறந்து பேசியுள்ளார். 

இந்நிலையில், தற்போது வீடியோ மூலம் பாலியல் குற்றத்திற்கு பதில் அளித்துள்ள வைரமுத்து...  தன்மீதான குற்றச்சாட்டுகள் எல்லாம் உள்நோக்கம் கொண்டவை எனவும் தெரிவித்துள்ளார். 

குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் வழக்கு தொடுக்கலாம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். வழக்கை சந்திக்க தாம் காத்திருப்பதாகவும், கடந்த ஒருவாரமாக வழக்கறிஞர்கள் மற்றும் அறிவுலக ஆன்றோர்களுடன் ஆலோசித்தேன் என்றும் கூறியுள்ளார். அசைக்க முடியாத ஆதாரங்களை தொகுத்து திரட்டி வைத்துள்ளாக வைரமுத்து அறிவித்துள்ளார். நான் நல்லவனா , கெட்டவனா என்று தற்போது யாரும் முடிவு செய்ய வேண்டாம் என்றும் இந்த வீடியோவில் கூறியுள்ளார். நீதிமன்றம் சொல்லட்டும் நீதிக்கு தலைவணங்குகிறேன் என வைரமுத்து விளக்கமளித்தார்.

இவரின் இந்த பேச்சுக்கு உடனடியாக ட்விட்டர் மூலம் பதில் கொடுத்துள்ள சின்மயி, வைரமுத்துவுக்கு உண்மை கண்டறியும் சோதனை தான் செய்ய வேண்டும் என அதிரடியாக பதில் கொடுத்துள்ளார்.