சமீப காலமாக  வெள்ளித்திரை காமெடி நடிகர்களுக்கு இணையான வரவேற்பு, சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சிகள் செய்யும் பிரபலங்களுக்கும் கிடைத்து வருகிறது. மேலும் சின்னத்திரையில் இவர்களுக்கு இருக்கும் வரவேற்பை பயன்படுத்தி, எளிதில் அவர்கள் திரைப்படங்களிலும் நடிக்கத் துவங்கி விடுகின்றனர். 

அதிலும் குழந்தை நட்சத்திரங்களின் காமெடி நிகழ்ச்சிகள் செய்தால் அதனை கண்டு ரசிக்கவே ஒரு தனி ரசிகர் கூட்டமே உண்டு. அந்த வகையில் தெலுங்கில், ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் குழந்தை நட்சத்திரம் கோகுல் சாய் கிருஷ்ணா.

இவர் பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணாவை போல், தன்னுடைய பேச்சு மற்றும் உடல் பாவனை செய்து, ரசிகர்களை கவர்ந்தவர். மேலும் பல்வேறு ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஜூனியர் பாலகிருஷ்ணா என்றும் புகழைப் பெற்றவர்.

இவர் திடீரென்று டெங்கு காய்ச்சலால் மரணம் அடைந்துள்ள சம்பவம், தெலுங்கு ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கோகுல் சாய் கிருஷ்ணா சித்தூர் மாவட்டடம், மடப்பள்ளியில் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இவருக்கு, கடந்த வாரம் முதல் அதிக அளவில் காச்சல் இருந்துள்ளது. இதனால் பெங்களூருவில் உள்ள, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மூச்சு திணறலும் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன், 17 ஆம் தேதி அன்று,  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடைய மரணத்திற்கு தெலுங்கு சூப்பர்ஸ்டார் நந்தமுரி பாலகிருஷ்ணா,  தன்னுடைய இரங்கலை, கோகுல் சாய் கிருஷ்ணாவின் பெற்றோர் யோகேந்திரா  மற்றும் சுமஞ்சலி ஆகியோருக்கு தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்பாராத இவருடைய மரணம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதனால் தன்னுடைய இதயம் உடைந்து விட்டதாகவும் பாலகிருஷ்ணா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவரை தொடர்ந்து பல தெலுங்கு பிரபலங்கள் தொடர்ந்து கோகுல் சாய் கிருஷ்ணாவின் மரணத்திற்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.