செக்க சிவந்த வானம் படத்தை இயக்கிய மணிரத்னத்துக்கே தெரியாத ட்விஸ்ட் என்ன தெரியுமா? க்ளைமாக்ஸிற்கு முன்பே குண்டுகள் துளைக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் ரசிகர்கள் திரையரங்கில் மிதந்து கொண்டிருப்பது தான். செக்க சிவந்த  வானம் என முகநூலில் ரசிகை ஒருவர் விமர்சனம் எழுதியிருக்கிறார்.

அந்த விமர்சனத்தில்; "செக்க சிவந்த வானம்" படம் பார்க்க ஆரம்பித்தேன். ஓப்பனிங் சீன்லேயே...டுமீல் டுமீல் என்று திரையை துளைத்துக்கொண்டு துப்ப ஆரம்பிக்கின்றன தோட்டாக்கள். யாருடைய தோட்டா? என்ற இன்வெஸ்டிகேஷனே தோட்டாக்களின் மூலம்தான் தொடங்குகிறது. துளைக்கப்பட்டது யாரால்? என்று யோசிப்பதற்குள் திரையிலிருந்து சீறிவரும் தோட்டாக்கள் நம்மை துளைத்து விடுமோ என்ற திக் திக் திணறடிக்கிறது.

பீதியில் நமது செல்ஃபோனை எடுத்தால் அதுவும் துப்பாக்கிபோல் காட்சியளித்து அக்கம்பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருப்பவர்களை சுட்டுப்பொசுக்கி விடுமோ என்ற நடு நடுக்கத்துடனேயே சுற்றுமுற்றும் பார்த்தால் அக்கம் பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருப்பவர்களின் செல்ஃபோன்களும் துப்பாக்கியாய் மாறி நம்மை குறிபார்க்கின்றன. கிட்டத்தட்ட சந்திரமுகி அரண்மனையில் சிக்கிய 'வடிவேலு'போல் பார்த்துக்கொண்டிருக்கும்போது இடைவேளை.

சிறுமூச்சு விட்டபடி வெளியில் சென்றால் பப்ஸ் விற்கிறவரில் ஆரம்பித்து பாப்கார்ன் விற்கிறவர் வரை கேங்ஸ்டர் போலவே நம் கண்களுக்கு காட்சியளிக்கிறார்கள். கண்களை மூடி ரிலாக்ஸ் பண்ணிக் கொண்டு மீண்டும் செக்கண்ட் ஆஃப் பார்க்க ஆரம்பித்த போது உடன் வந்தவர் மீதான நம்பிக்கையையே சுட்டு பொசுக்க ஆரம்பித்தது.

அப்பா பிரகாஷ்ராஜ் இடத்தைப் பிடிக்க ப்ளான் பண்ணும் மூத்த மகன் அரவிந்த்சாமி... அண்ணன் அரவிந்த்சாமியின் இடத்தைப்பிடிக்க அலையும் தம்பி அருண்விஜய்... இரண்டு பேரையும் ஓவர் டேக் செய்துவிட்டு முதலிடத்துக்கு வரவேண்டும் என்று பேராசைப்படும் கடைகுட்டிப் பிள்ளை சிம்பு என அதிகாரத்தைக் கைப்பற்ற அண்ணன் தம்பிகள் அடித்துக்கொ(ல்)ள்வதை பூச்சாண்டிகள் காட்டி மிரட்டுகிறது.

அண்ணனின் அதிகாரத்தை கைப்பற்றத் துடிக்கும் தம்பிகளின் பார்வையில் மனைவியையையும் காதலியையும் பார்க்கும் பார்வைகளும் பகீரூட்டுகின்றன. மணிரத்னம் படம் என்பதாலோ என்னவோ குடும்பத்தில் அன்பு, பாசம், நேசம், உறவுகள் என எந்த செண்டிமெண்டும் இல்லாமல் money...money... என தேடி ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

வழக்கம்போல...க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் என்ற பெயரில்(எம்.ஜி.ஆர். சிவாஜிப்படங்கள் திடீரென்று நினைவுக்கு வரவில்லை) குருதிப்புனல், விசுவரூபம், போக்கிரி, சிங்கம்-2, மீகாமன் என காவல்துறையினர் அன்டர்கிரவுண்ட் ஆபரேஷன்களில் ஈடுபட்டு கேங்ஸ்டர்களின் கதையை முடிக்கும் நேர்மையான போலீஸ் ஆஃபிசர் விஜய்சேதுபதி.

செக்க சிவந்த வானம் கொரிய படத்தின் காப்பி என்கிறார்கள். இப்படி, தமிழிலேயே ஏகப்பட்ட படங்கள் மட்டுமல்ல குறும்படங்கள் யூட்யூபில் நிறைய உலாவிக்கொண்டிருக்கின்றன. எளிதில் யூகிக்கக்கூடிய கதை. மழைக்குருவி பாடலுக்காகத்தான் படத்திற்கே சென்றேன். இரண்டே வரியில், அப்பாடலை முடித்து ஏமாற்றிவிட்டார்கள். படத்தில் ஒளிப்பதிவு மட்டும்தான் பிடித்திருந்தது.

இப்படி எல்லாப் படத்தையும் காப்பி பேஸ்ட் செய்த மணிரத்னத்தை "மணி இஸ் பேக்" என்கிறார்கள் பலர். ஆனால், "மணி இஸ் ஃபேக்"... செக்க சிவந்த "வேணாம்" என்றுதான் படம் முடிந்தபோது சொல்லத் தோன்றியது.

இப்படத்தை இயக்கிய மணிரத்னத்துக்கே தெரியாத ட்விஸ்ட் என்ன தெரியுமா? க்ளைமாக்ஸிற்கு முன்பே குண்டுகள் துளைக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் ரசிகர்கள் திரையரங்கில் மிதந்துகொண்டிருப்பதுதான். செக்க சிவந்த திரையரங்கு!

- வினி சர்பனா

இந்திய சினிமாவிலே டான், மாபியா வகை படங்களில் காட்பாதர் பாதிப்பு இல்லாமல் யாராலும் படம் எடுக்க முடியாது! மணிரத்னம் மீதனம் விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனது முகநூல் பக்கத்தில் சரத்பாபு என்பவர் எழுதியிருக்கும் விமர்சனம் தான் இது.

இந்திய சினிமாவில் வந்த முக்கால்வாசி டான், தாதாயிசம்,மாபியா வகை படங்கள் காட்ஃபாதர் படத்தின் பாதிப்பு இல்லாமல் இருந்தது இல்லை, காட்ஃபாதர் படத்தை பார்த்த யாராலும் அந்த படத்தின் பாதிப்பில் இருந்து மீண்டு வர முடியாது. மணிரத்னமுக்கும் கமலுக்கும் ஒரு போட்டி இருந்ததாம் யார் காட்ஃபாதர் படத்தை சிறப்பாக எடுப்பதுன்னு, மணிரத்னம் அவர் ஸ்டைலில் காட்ஃபாதரை தழுவி நாயகன் எடுத்தார்.

கமல்ஹாசன் அதை வேறு ஒரு பரிமாணத்தில் தேவர்மகனை எடுத்தார்.ரெண்டுமே அற்புதமாய் எடுக்கப்பட்ட படங்கள். இரண்டு படத்திலுமே கமல் தான் நடித்து இருப்பார் நாயகன் படத்தில் மர்லான் பிராண்டோவாக (விட்டோ கார்லியன்) நடித்து இருப்பார் கமல்.தேவர்மகன் படத்தில் அல்பசினோவாகவும் (மைக்கேல் கார்லியனாக) நடித்து இருப்பார். இரண்டிலுமே அட்டகாசம் படுத்தி இருப்பார்.

மணிரத்னம் காட்ஃபாதர் திரைப்படம் மட்டுமில்லாமல் நாவலும் படித்து இருக்கிறார். மணிரத்னம் தொடர்ந்து காட்ஃபாதர் படத்தில் இருந்து இன்ஸ்பையராகி பல கேரக்டர்களில் அவர் படங்களில் உலவ விட்டு இருக்கிறார். தமிழில் மணிரத்னமின் முதல் படமான பகல் நிலவில் சத்யராஜ் நடை, உடை, பாவனை காட்ஃபாதர் பிராண்டோ கேரக்டரை வைத்தே வடிவமைத்து இருப்பார்.

அதன் பின் அவரோட பல படங்களில் நாயகன் படத்தில் வரும் வேலுநாயக்கர்,அக்னி நட்சித்திரத்தில் அவர்கள் அப்பாவை ஹாஸ்பிடலில் காப்பாற்றும் காட்சி, தளபதி படத்தில் மம்மூட்டி சாகும் காட்சி , சத்ரியன் விஜயகாந்த் சின்ன வயது பிளாஷ்பாக்கில் வரும் கதை காட்ஃபாதர்ல் வரும் கதை தான் அவரின் படங்களில் காட்ஃபாதர் தாக்கம் என்றுமே இருந்துகொண்டே இருக்கும்.

இப்போது செக்க சிவந்த வானம் படத்தில் தான் மணிரத்னம் புதிதாய் இன்ஸ்பைர் ஆனது மாதிரி இங்கே பொங்கிகொண்டு இருக்கிறார்கள். மணிரத்னம் ரசித்து பார்த்த காட்ஃபாதர் படத்தையும்,படித்த நாவலும் அவர் படங்களில் எதிரொலித்து கொண்டே தான் இருக்கும். இதில் எந்த தவறும் இல்லை காட்ஃபாதர் படத்துக்கு மணிரத்னம் செய்யும் மரியாதையாக tribute ஆகத்தான் இதை அணுக வேண்டும்.

இன்னும் சிலர் செக்க சிவந்த வானம் கலைஞரின் கதையை தான் எடுத்து இருக்கிறார்ன்னு மீம் போட்டு கொண்டு இருக்கிறார்கள். ஆம் தமிழ்நாட்டில் கலைஞர் தான் காட்ஃபாதர் . காட்ஃபாதர் படத்தில் வரும் கேரக்டர்களும் கலைஞர் குடும்பத்தை ஒப்பிட்டு பார்த்தால் கிட்டத்தட்ட ஒரேபோல தான் இருக்கும். தலைவர் கலைஞர் கருணாநிதிக்கும் மிகவும் பிடித்த படம் காட்ஃபாதர். தமிழ் சினிமாவில் மட்டுமில்லை இந்திய சினிமாவிலே டான், மாபியா வகை படங்களில் காட்ஃபாதர் பாதிப்பு இல்லாமல் யாராலும் படம் எடுக்க முடியாது.