இசையால் பலரது மனதை கொள்ளையடித்தவர் இசைஞானி    இளையராஜா. இவரின் 75 ஆவது வருடத்தை கொண்டாடும் விதமாக,  இளையராஜா - 75 என்று தமிழ் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் இணைந்து பிரமாண்ட விழா ஒன்றை ஏற்படு செய்து நடத்தினர்.

2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் இந்த விழா சிறப்பாக நடைபெற்றது. 2 ஆம் தேதி அன்று, இளையராஜாவை பற்றியும் அவருடைய இசையை பற்றியும், அவருடைய படங்களில் பணியாற்றிய பிரபலங்கள் பகிர்ந்து கொண்டு அவரிடம் சில கேள்விகளையும் கேட்டனர். 

மேலும் இவருடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவரான பழம்பெரும் நடிகர் சிவகுமார், இளையராஜாவிற்கு தங்க மோதிரம் ஒன்றையும் அணிவித்தார். இதை தொடர்ந்து நடிகர், நடிகைகளில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. 

இதை தொடர்ந்து நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களும், இளைய ராஜா இசையில் பல படங்களில் நடித்தவர்களுமான ரஜினி, கமல், உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்பித்தார். 

பின் இளையராஜாவை பற்றி அனைவரும் பாராட்டி பேசிய நிலையில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இளையராஜாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிவிட்டு பின் இளையராஜா குறித்து பேசினார்.

" இளையராஜாவின் காலில் விழுந்தது ஒரு ரசிகனாக அவருக்கு மரியாதை செலுத்தியது என பெருமையாக பேசினார். தொடர்ந்து பேசிய அவர் இதயங்களில் உள்ள பாரங்களை இறக்கி வைக்கும் இடம் இது. சென்ற ஆண்டு பிரதமர் மோடி இளையராஜா அவர்களுக்கு பத்மவிபூஷன் விருது வழங்கி தமிழர் அனைவருக்கும் பெருமை சேர்த்தார். 

இளையராஜா, இசைக்கு மட்டும் ராஜா அல்ல ஆன்மீக ரீதியாகவும் தர்மத்தின் ரீதியாகவும் வாழ்ந்து வருபவர். 

அவரது பாதத்தினை தொட்டு வணங்கிய போது மூவரின் ஆசியும் கிட்டியதாக எண்ணினேன் என்றார். மேலும் இவரை போன்ற மாமனிதன் தமிழகத்திற்கு கிடைத்தது மகா பாக்கியம் என்கிறார். 

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் இளையாராஜா காலில் விழுவது மட்டும் இல்லாமல், அவருடைய ஒவ்வொரு பிறந்தாளுக்கும் சென்று அவரிடம் ஆசீர்வாதம் வாங்கி வருவது குறிப்பிடத்தக்கது.