கொரோனா பிரச்சனை காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருந்த தியேட்டர்கள் மூடப்பட்டிருந்த நிலையில், தமிழகத்தில் 50 சதவீத பார்வையாளர்களுடன் கடந்த 15ம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் மக்கள் கூட்டம் கூடுவது குறைவாக காணப்பட்டது. தற்போது பொங்கல் விருந்தாக விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13ம் தேதி வெளியாக உள்ள நிலையில், தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டது. 

கடந்த வாரம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ரகசியமாக சந்தித்த நடிகர் விஜய், திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். அதேபோல் நடிகர் சிம்புவும் தமிழ் புத்தாண்டிற்குள் தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டுமென வலியுறுத்தினார். 

தமிழகத்தில் மீண்டும் ஜனவரி 31ம் தேதி வரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதனால் விஜய்யின் கோரிக்கையை முதலமைச்சர் நிராகரித்து விட்டதாக கூறப்பட்டது. ஆனால் 100 சதவீத பார்வையாளர்கள் குறித்து தனி அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகின.

அதேபோல் இருதினங்களுக்கு முன்பு தமிழக அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு பதிலாக 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதனால் தியேட்டர் உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள், திரையுலகினர் உள்ளிட்ட பலரும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர். ஆனால் மூடப்பட்ட அறைக்குள் கொரோனா தொற்று வேகம் பரவும் என்பதால் தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிப்பது ஆபத்து என இந்திய மருத்துவ கழகத்தின் விஞ்ஞானி பிரதீப் கவுர் உள்ளிட்ட பலரும் எச்சரிக்கை விடுத்து வந்தனர். 

தற்போது தமிழக தலைமைச் செயலாளருக்கு மத்திய உள்துறை செயலாளர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தமிழக தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிக்க கூடாது என்றும், அந்த அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்தாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.