எங்க வீட்டு மாப்பிள்ளை:

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், 'எங்க வீட்டு மாப்பிளை' என்கிற நிகழ்ச்சியின் மூலம் நடிகர் ஆர்யா பெண் தேடி வருவது அனைவரும் அறிந்தது தான். இந்த நிகழ்ச்சி துவங்கிய நாட்களில் இருந்து ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என தென்மாவட்ட பெண்கள் கூட்டமைப்பின் நிர்வாகி ஜானகி அம்மாள் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது... 

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 19 ஆம் தேதி முதல் எங்கள் வீட்டு மாப்பிள்ளை என்கிற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் 16 பெண்கள் கலந்துக்கொண்டனர். இதில் ஆர்யா திருப்தி அடையும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் நிகழ்ச்சியிலிருந்து அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று தொகுப்பாளர் சங்கீதா அடிக்கடி கூறிவருகிறார்.

இந்த நிகழ்ச்சி பெண்களின் கண்ணியத்துக்கு எதிரான அம்சங்கள் இருக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்முறையை தூண்டும் வகையில் இருக்கிறது. எனவே இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும். மேலும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் அதிகாரி, நடிகர் ஆர்யா, சங்கீதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சக செயலாளர், தணிகை வாரிய தலைவர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.