தன்னை முதன்முதலில் திரையுலகில் அறிமுகம் செய்த நன்றிக் கடனுக்காக ஒரு கோடி ரூபாய் சம்பளத்தை வாங்க மறுத்து மலையாளத் திரையுலகினர் மத்தியில் வாழ்த்து மழையில் நனைகிறார் நம் தமிழ் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்.

இந்தியாவின் முதல் 3டி படம் மை டியர் குட்டிச்சாத்தான், மலையாள முன்னணி நடிகர்கள் மம்முட்டி மோகன்லால் உட்பட எல்லா நடிகர்களின் படங்கள், கமல் நடித்த ’சாணக்யன்’ உட்பட ஏராளமான படங்களை இயக்கியவர் டி.கே.ராஜிவ்குமார்.இவர் 1999 ஆம் ஆண்டு இயக்கிய ஜலமர்மரம் படம் தேசியவிருது பெற்ற படம்.அப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் ரவிவர்மன். இன்று தமிழ், தெலுங்கு, இந்தி என எல்லா மொழிகளிலும் முன்னணி ஒளிப்பதிவாளராக இருக்கும் அதே ரவிவர்மன் தான்.,

இப்போது தமிழின் மிகப்பெரிய படங்களான ’இந்தியன் 2’, ’பொன்னியின் செல்வன்’ ஆகிய இரு படங்களுக்கும் இவர்தான் ஒளிப்பதிவாளர்.இருபது ஆண்டுகள் கழித்து இயக்குநர் டி.கே.ராஜீவ்குமார் இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் படம் கோலாம்பி. நித்யாமேனன் நடித்திருக்கும் அந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருப்பவர் ரவிவர்மன்.

இதிலென்ன சிறப்பு என்றால், தம்மை ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்திய இயக்குநர் டி.கே.ராஜீவ்குமாருக்காக சம்பளமே வாங்காமல் பணிபுரிந்திருக்கிறார் ரவிவர்மன்.இன்று கோடிகளில் சம்பளம் வாங்குகிற முன்னணி ஒளிப்பதிவாளராக இருக்கும் நிலையிலும் தம்மை அறிமுகப்படுத்தியவருக்கான நன்றியாக சம்பளம் வாங்காமல் அவர் பணிபுரிந்தது குறித்து மலையாளத் திரையுலகில் பெருமையுடன் பேசுகின்றனர். இப்படி நன்றி மறக்காத சிலரும் இன்னும் சினிமாவில் இருக்கத்தான் செய்கிறார்கள்.