ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான படத்தின் பாடல்கள் சூப்பர்ஹிட்டாக, மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிகில் படம், உலகம் முழுவதும் கடந்த 25ம் தேதி ரிலீஸ் ஆனது. 

இந்தப் படத்தில், ராயப்பன், பிகில் என்ற இரு கேரக்டரில் விஜய் நடித்திருந்தார். இதில், அப்பா ராயப்பன் கேரக்டர் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அத்துடன், மகளிர் கால்பந்து அணியின் பயிற்சியாளராக வரும் பிகில் கேரக்டரும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. 

தீபாவளி விருந்தாக வெளியான இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்தாலும், விஜய் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். இதனால் சுமார் ரூ.180 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பிகில் படம் ரிலீசான 3 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. 

இதன்மூலம், அதிகமுறை ரூ.100 கோடி வசூல் செய்த படங்களை அளித்த நடிகர் என்ற பெருமையை விஜய் பெற்றுள்ளார். 

சென்னையில் மட்டும் இந்தப் படம் 3 நாட்களில் ரூ.5.26 கோடி வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. ரூ.100 கோடி வசூல் செய்த படங்களின் வரிசையில் பிகில் படம் இணைந்ததை, விஜய் ரசிகர்கள் சமூகவலைதளத்தில் டிரெண்டிங் செய்து கொண்டாடி வருகின்றனர். 

தொடர் விடுமுறை என்பதால், பிகில் படம் விரைவில் ரூ.200 கோடி வசூலை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.