பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் அட்லீ. ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சத்யராஜ் என முதல் படத்திலேயே மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்து ராஜா, ராணி என்ற படத்தை இயக்கினார். முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட், கோலிவுட்டின் செல்லப்பிள்ளையாக வலம் வர ஆரம்பித்தார். அதன் பின்னர் அடுத்தடுத்து தெறி, மெர்சல், பிகில் என தளபதி விஜய்யை வைத்து ஹாட்ரிக் ஹிட் கொடுத்து முன்னணி இயக்குநராக உயர்ந்தார். இதற்கு முன்பே இயக்குநராக மட்டுமல்லாது தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்த அட்லீ,  2017ம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான “சங்கிலி புங்கிலி கதவ தொற” என்ற படத்தை தயாரித்திருந்தார். மீண்டும் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ள அட்லீ, தனது ஏ ஃபார்  ஆப்பிள் நிறுவனத்துடன் இணைந்து பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் சேர்ந்து  “அந்தகாரம்” என்ற படத்தை தயாரிக்க உள்ளார்.  அதில் கைதி, மாஸ்டர் ஆகிய படங்களில் நடித்த அர்ஜுன் தாஸ்,  வினோத் கிஷன், பூஜா ராமச்சந்திரன், மீஷா கோஷல் ஆகியோர் நடித்துள்ளனர். விக்னராஜன் இயக்க உள்ளார். 


இந்த படத்தின் டிரெய்லரை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று வெளியானது, ஒரே நாளில்  4 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து, யூ-டியூப் ட்ரெண்டிங்கிலும் முதலிடம் பிடித்தது. அந்தகாரம் படத்தின் டிரெய்லரை பார்த்த பாலிவுட்டின் முன்னணி இயக்குநரான கரண் ஜோகர் அட்லீக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 
நண்பர்களே இதை பாருங்கள்... படத்தை காண மிகவும் ஆவலாக காத்திருக்கிறேன்... வாழ்த்துக்கள் அட்லீ என்று ட்வீட் செய்துள்ளார். கரண் ஜோகரின் வாழ்த்தை பார்த்து தாறுமாறு மகிழ்ச்சியான அட்லீ, கரண் ஜோகருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.