தமிழ் திரையுலகில் குறிப்பிட்ட இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் பாபி சிம்ஹா. இயல்பான நடிப்பால் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கும் இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் பேட்ட படத்தில் நடித்து வருகிறார். மதுரை மண்ணின் வாசனையுடன் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகர்தண்டா படத்தில் சேது என்ற கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா அசத்தியிருப்பார். இதற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் இவருக்கு கிடைத்தது. 

இத்திரைப்படத்தை அடுத்து கார்த்திக் சுப்பராஜ் உடன் இவர் இணையும் படம் பேட்ட. ஜிகர்தண்டாவை போலவே இந்த படத்திலும் இவரது கதாபாத்திரம் வலுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பாபி சிம்ஹாவின் அடுத்த திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. உனக்குள் நான், லைட்மேன், நீலம் ஆகிய படங்களை இயக்கிய வெங்கடேஷ் குமாரின் இயக்கத்தில் இவர் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இவர் இயக்கிய மூன்று படங்களும் வெவ்வேறு கதைக்களங்களை  கொண்டவை. கடைசியாக இயக்கிய நீளம் திரைப்படம் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரை மையமாகக் கொண்டது. இதில் இந்திய அரசுக்கு எதிரான கருத்துக்கள் இருப்பதாக கூறி இப்படத்திற்கு தணிக்கை வாரியம் சான்றிதழ் கொடுக்க  மறுத்துவிட்டது. இதனால் படம் வெளியாவதில் சிக்கல் நீடிக்கிறது. 

இருந்தபோதிலும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வாழ்வை மையமாகக் கொண்டு திரைப்படம் இயக்க முடிவு செய்துள்ளார். இதில் நடிக்க பாபி சிம்ஹா ஒப்புக்கொண்டுள்ளார். பிரபாகரன் கதாபாத்திரத்தில் இவர் நடிக்க உள்ளார். விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு சீறும் புலி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே.