சென்னையில் பிரபல நட்சத்திர ஓட்டலில் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டதாக நடிகர் பாபிசிம்ஹா மீது புகார் எழுந்துள்ளது.

   சூது கவ்வும் திரைப்படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் பாபி சிம்ஹா. தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் கார்த்தி சுப்பராஜ் இயக்கும் திரைப்படத்தில் பாபி சிம்ஹா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இது இல்லாமல் மேலும் ஒரு சில படங்களில் கதாநாயகனாக பாபி சிம்ஹா வலம் வருகிறார். நல்ல நடிகர் என்றும் நல்ல மனிதர் என்று திரையுலகில் பாபி சிம்ஹாவை கூறி வருகின்றனர்.

   இந்த நிலையில் நேற்று வார இறுதி நாள் என்பதால் பாபி சிம்ஹா தனது நண்பர் கருணா என்பவருடன் சென்னை கிண்டி ஈக்காட்டு தாங்கலில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு நண்பருடன் வயிறு முட்ட முட்ட பாபி சிம்ஹா மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதனால் போதை தலைக்கேறிய நிலையில் பாபி சிம்ஹா என்ன செய்வது என்றே தெரியாமல் பாரில் இருந்த மற்றவர்களை அழைத்து ஏதேதோ பேச ஆரம்பித்துள்ளார்.

 இதனால் அதிருப்தி அடைந்த மற்றவர்கள் பாபி சிம்ஹா மீது பார் நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். விரைந்து வந்த ஓட்டல் ஊழியர்கள் பாபி சிம்ஹாவை பாரில் இருந்து வெளியேறுமாறு கேட்டுக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இதனால் கோபம் அடைத் பாபி சிம்ஹா, தான் பிரபல நடிகர் என்றும் தன்னை எப்படி வெளியே போகச் சொல்லலாம் என்று ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது உடன் இருந்த நண்பர் கருணா, பிரச்சனை வேண்டாம் என்று சென்றுவிடலாம் என்று பாபியிடம் கூறியுள்ளார்.

  ஆனால் நண்பரின் சமதானத்தை ஏற்காமல் நண்பருடனேயே பாபி சிம்ஹா தகராறு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் நண்பர் மூஞ்சிலேயே பாபி சிம்ஹா ஓங்கி ஒரு குத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. பின்னர் போராடி பாபி சிம்ஹாவை ஓட்டல் ஊழியர்களும் நண்பரும் அங்கிருந்து அழைத்துச் சென்றுள்ளனர்.