இயக்குனர் அட்லி இயக்கத்தில்,  தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் 'பிகில்'.  இந்த படத்தில் விஜய் நடித்த காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டு, போஸ் புரோடக்ஷான் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

விஜய்க்கு ஜோடியாக நீண்ட இடைவேளைக்குப் பின் நடிகை நயன்தாரா நடித்துள்ளார். அட்லி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.  

மேலும் இந்த படத்தில் 'பரியேறும் பெருமாள்'  படத்தின் நாயகன் கதிர், ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, இந்துஜா, என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தில் ஏ.ஆர் ரகுமான் இசையில் அவரே பாடிய சிங்க பெண்ணே பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  

தளபதி விஜய்யும்,  இந்த படத்தில் முதல்முறையாக ஏ.ஆர்.ரகுமான் இசையில் 'வெறித்தனம்' என்கிற பாடலை பாடவுள்ளார். எனவே இந்தப் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் இப்போது அதிக அளவு எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 

இந்நிலையில் இந்த படத்தை தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 27 ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்திருந்த நிலையில், அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வருவதால்,  அறிவித்த தேதிக்கு முன்பே படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர் படக்குழுவினர். 

இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில் அக்டோபர் 24 ஆம் தேதி 'பிகில்' படத்தை வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும். இது குறித்த அதிகார பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஏற்கனவே தல அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் ஆகஸ்ட் 8 ஆம் தேதி, ரிலீஸ் ஆகும் என கூறப்பட்ட நிலையில், செவ்வாய் கிழமை அந்த தேதி வந்ததால், கடைசி நேரத்தில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.