வசூலில் பிகில் படம்தான் டாப் அதற்கு ஆதாரம் தர நாங்கள் தயார் என நெல்லையில் உள்ள ராம் சினிமாஸ் திரையரங்கம் அதிரடியாக கருத்து பதிவிட்டுள்ளது.  விஜய் நடிப்பில் கடந்த மாதம்  25ஆம் தேதி வெளியான பிகில் திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளை கடந்து திரைக்கு வந்தது.  இப்படத்திற்கு ஒரே ஒருநாள் மட்டுமே சிறப்பு காட்சிகள் அனுமதிக்கப்பட்டது. மற்ற நாட்களுக்கு சிறப்புக் காட்சிகள் இல்லை என கெடுபிடி கட்டப்பட்டது.  இது பிகில் படத்தின் வசூலில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டு வந்தது.

   

அத்துடன் பல படங்களில் இருந்து காப்பி அடித்து படம் உருவாக்கப்பட்டுள்ளது என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது .  இதனால் படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்றும் பல திரையரங்குகள் வெறிச்சோடி காணப்படுகிறது என்றும் கூறப்பட்டது. அத்துடன்  சில தினங்களுக்கு முன்பு கூட ஒரு திரையரங்கில் வெறும் நான்கு டிக்கெட்டுகளே விற்பனையானதால் அன்றைய காட்சி முழுவதும் ரத்து செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானது. ஆனாலும் கடந்த 25ஆம் தேதி வெளியான பிகில் திரைப்படம்,  வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது.  உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது என தற்போது பாசிடிவ் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

 

கடந்த 2019-ம் ஆண்டு நெல்லையில் வெளியான படங்களில் முதல் வாரத்தில் அதிக வசூல் செய்த படம் பிகில் திரைப்படம்தான் என்றும் அதற்கான ஆதாரத்தைத்தர தயார் என்றும் நெல்லை ராம் சினிமாஸ் திரையரங்கம் தெரிவித்துள்ளதுடன். இதுவரை எந்த திரைப்படமும் வசூலிக்காத அளவிற்கு பிகில் திரைப்படம் வசூலித்துள்ளது என்றும் அத்திரையரங்கம் அறிவித்துள்ளது.  இந்த தகவல் சமூக வலைத்தளத்தில் வெளியாகி விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.