தீபாவளிக்கு இன்னும் சரியாக ஒரு வாரமே உள்ள நிலையில் ‘பிகில்’படத்தின் தமிழக விநியோகஸ்தர்கள் கதிகலங்கிப்போயிருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் அதிகாலைக் காட்சிகளுக்கான அனுமதியை தமிழக அரசு இழுத்தடித்து வருவதே இவர்களின் தவிப்புக்குக் காரணம்.

பல திரைமறைவு  முட்டல் மோதல்களுக்குப் பின் தீபாவளி ரேஸில் குதிக்கத் தயாராகிவிட்டது விஜய்யின் ‘பிகில்’படம். உத்தேசமான ஒரு தகவலின்படி இப்படத்தின் தமிழக தியேட்டர் உரிமை மட்டும் 80 முதல் 85 கோடி வரை விலை போயிருக்கிறது. இதற்கு முந்தைய விஜய் படங்களை விட இது சுமார் 20 சதவிகிதம் அதிகம். படத்தின் ட்ரெயிலர் நல்ல எதிர்பார்ப்பைக் கிளப்பியிருந்ததும், தீபாவளி வசூலில், குறிப்பாக அதிகாலை ஸ்பெஷல் காட்சிகளில் நல்ல கலெக்‌ஷனைப் பார்த்துவிடலாம் என்பதும் விநியோகஸ்தர்களின் கணக்கு. ஆனால் விநியோகஸ்தர்களின் அந்தக் கணக்கில் மண் விழுந்திருக்கிறது.

இடைத் தேர்தல்களில் ஆளும் அதிமுக புள்ளிகள் பிசியாக இருப்பதால் இதுவரை அதிகாலைக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதே போல் எக்ஸ்ட்ரா கட்டணம் வசூலித்தால் தியேட்டர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் இருக்கும் என்ற வாய்மொழி உத்தரவும் ஸ்ட்ரிக்டாக வழங்கப்பட்டுள்ளதாம். இந்த இரண்டு கொள்ளைகளுக்கும் அனுமதி கிடைக்காவிட்டால் ஒரு நல்ல வசூலை படம் அடைய வாய்ப்பில்லை என்பதால் விநியோகஸ்தர்கள் கதிகலங்கிப்போயுள்ளனராம். தேர்தல் பிரச்சாரம் முடிந்து இன்று இரவு சென்னை திரும்பும் அதிமுக பெருந்தலைகள் சிறப்புக்காட்சிக்கு அனுமதி வழங்கும் தங்கள் முடிவை வாக்குப்பதிவு முடிந்த மறுநாள்தான் அறிவிப்பார்களாம். அதாவது விஜய் ரசிகர்களின் வாக்கு எதிர்க்கட்சிகளுக்கு போய்விடக்கூடாது அல்லவா?