தேவி திரைப்படத்தின் மூலம் மீண்டும் நடிகராக தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்தார் நடிகர் பிரபுதேவா. இவர் சமீபத்தில் நடித்த 'லட்சுமி' படத்தை தொடர்ந்து தற்போது  'தேவி 2' உள்பட ஆறு படங்களில் நடித்து வருகிறார்.

 இந்த படங்கள் அனைத்தும் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது. அவ்வாறு பிரபுதேவா நடித்து வரும் படங்களில் ஒன்று 'தேள்' இந்த படத்தை 'தூத்துகுடி', 'மதுரை சம்பவம் உள்பட ஒருசில படங்களில் நடித்த ஹரிகுமார் இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் அனைத்தும் முடிவடைந்து நாளை முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடிக்க சம்யுக்தா ஹெக்டே என்ற கன்னட நடிகை ஒப்பந்தமாகியுள்ளார். 

இவர் கன்னட பிக்பாஸ் 5ல் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழைந்து எட்டே நாளில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் 'காலா' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ஈஸ்வரிராவ் மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.