"வந்தா ராஜாவாதான் வருவேன்" படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, 'மாநாடு' படத்தில் நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. அரசியலை மையமாக வைத்து எடுக்கப்படவிருந்த இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷினி நடிப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. "மாநாடு" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்ட நிலையில், பல்வேறு காரணங்களால் படம் ஆரம்பிக்க காலதாமதம் ஆனது. அந்த சமயத்தில் "மாநாடு" படத்தில் இருந்து சிம்பு நீக்கப்பட்டதாக தகவல்கள் பரவின.

இதனிடையே "மகா மாநாடு" என்ற படத்தை சிம்புவே இயக்கி நடிக்கவிருப்பதாக தகவல் பரவியது. இந்த படத்தை சினி ஆர்ட்ஸ் நிறுவனம் ரூ.125 கோடி செலவில் 5 மொழிகளில் படமாக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் திடீர் திருப்பமாக, சிம்புவை வைத்து "மாநாடு" படத்தை தயாரிக்க உள்ளதாகவும், படப்பிடிப்பில் சரியாக கலந்துகொள்வேன் என்று சிம்பு உறுதியளித்துள்ளதாகவும் அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி டுவிட்டரில் பதிவிட்டார். இந்த பதிவு சிம்பு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. 

இந்நிலையில் சபரி மலைக்கு மாலை போட்டுள்ள சிம்பு, நடிகரும் பிக்பாஸ் சீசன் 2 பங்கேற்பாளருமான மஹத்துடன் ஓட்டலுக்கு சென்ற புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தனது டுவிட்டர் பக்கத்தில் போட்டோவை போஸ்ட் செய்துள்ள மஹத், "டின்னர் டைம் வித் சாமி" என்று பதிவிட்டுள்ளார். அந்த போட்டோவில் சபரி மலைக்கு மாலை போட்டுள்ள சிம்பு, நெற்றில் சந்தனம் வைத்து, கறுப்பு உடையில் ஆழ்ந்த சிந்தனையுடன் அமர்ந்திருக்கிறார்.