பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்து 'ராஜா ராணி' படத்தின் மூலம் இயக்குநராக அடியெடுத்து வைத்தவர்  அட்லீ. முதல் படத்தையே ரொமாண்டிக் படமாக கொடுத்து ரசிகர்களை கொண்டாட வைத்த அவர், பின்னர் நடிகர் விஜய்யுடன் கூட்டணி சேர்ந்தார். 

அதன்பின் அவர் இயக்கிய படங்கள் அனைத்துமே மாஸ் படங்கள்தான். 'தெறி' படத்தில் இளையதளபதியாக இருந்த விஜய்யை, 'மெர்சல்' படத்தில் தளபதியாக்கி அழகு பார்த்த அட்லீ, பிகில் படத்தின் மூலம் வசூல் சக்கரவர்த்தியாக உயர்த்தி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளார். 

இதன் காரணமாக, அட்லீயுடன் இணைந்து பணியாற்ற பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் உட்பட பல முன்னணி ஹீரோக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், பிகில் வெற்றியால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் அட்லீ, தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். 

அப்போது பேசிய அவர், "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து பாட்ஷா -2 பண்ணனும் என்று ரொம்ப ஆசையாக உள்ளது. ஏன் என்றால்? அதுதான் ஆக்ஷன் படங்களுக்கு பெஸ்ட் டெம்ப்ளேட். பாட்ஷா- 2 படத்திற்கான கதை ஒன்னும் என்கிட்ட இருக்கு. தலைவர் ஓகே சொல்லிட்டா பண்ணிடுவோம்" என  கூறியுள்ளார்.


தமிழ் சினிமா ரசிகர்கள் தற்போதும் கொண்டாடும் படங்களில் ஒன்று பாட்ஷா. இந்தப் படம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் திரைப்பயணத்தில் மிக முக்கிய படம் எனலாம். இதன் 2-வது பாகத்தை எடுக்க விருப்பப்படும் இயக்குநர் அட்லீயின் ஆசையை, சூப்பர் ஸ்டார் நிறைவேற்றுவாரா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.