தயாரிப்பாளரின் ஈகோ பிரச்சினையால் தான் இயக்கிய ‘வர்மா’ படம் முடக்கி வைக்கப்பட்டத்தைத் தொடர்ந்து அப்படத்திலிருந்து வெளியேறிய இயக்குநர் பாலா, சுறுசுறுப்பாக அவசர அவசரமாக தனது அடுத்த படத்தைத் துவங்கவிருக்கிறார்.

’99ல் ‘சேது’ படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்த பாலா கடந்த 20 ஆண்டுகளில் மொத்தம் எட்டுப் படங்களே இயக்கியுள்ளார். அவரது ஒன்பதாவது படம்தான் ‘வர்மா’. வழக்கமாக தனது அடுத்த படத்துக்கு ஆறு மாதங்கள் முதல் ஒருவருடம் வரை ஓய்வெடுத்துவிட்டே படம் இயக்குவது பாலாவின் இயல்பு. ஆனால் ‘வர்மா’ படத்தால் தனக்கு நேர்ந்த அவமானத்தை எவ்வளவு சீக்கிரம் சரிசெய்ய முடியுமோ அவ்வளவு சீக்கிரம் செய்யவேண்டுமென்று பாலா விரும்புகிறார்.

அதனால் சுமார் இருவாரங்களுக்கு முன்பே தனது அடுத்தபடக் கதையை முடிவெ செய்த  இயக்குநர் பாலா, நேற்று திடீரென ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு கூட்ட அரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தைப் பார்வையிட்டார். பொதுமக்கள் மனுக்களுடன் நீண்ட வரிசையில் காத்திருப்பது, அவர்களிடம் ஊழியர்கள் மனுக்களை பெறுவது, அதிகாரிகள் பதில் அளிப்பது உள்ளிட்ட நிகழ்வுகளை பாலா பார்வையிட்டார்.

பின்னர் வெளியே வந்த பாலாவிடம், அவரது வருகை பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, "நான் புதிதாக இயக்க உள்ள ஒரு திரைப்படத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தொடர்பான காட்சிகள் இடம்பெறுகின்றன. அதனால், கூட்டம் எப்படி நடைபெறுகிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக வந்தேன்" என்று கூறினார்.

‘வர்மா’ சர்ச்சை வெளியே வந்த தினத்திலிருந்தே நடிகர் ஆர்யா மட்டுமே தினமும் பாலாவுடன் பேசிவருவதாகவும், அநேகமாக ஆர்யாவே பாலாவின் அடுத்த பட ஹீரோவாக இருக்கவாய்ப்புள்ளது என்றும் தகவல்கள் நடமாடுகின்றன.