நடிகர் சங்கத் தேர்தல் ஜூன் 23ஆம் தேதி நடைபெற இருந்ததை ஒட்டி நேற்றைய தினம் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியைச் சேர்ந்தவர்கள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனையில்,  நடிகர் விஷால், கருணாஸ்,  பூச்சி முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  இந்த ஆலோசனை நடந்து முடிந்த சில நிமிடங்களில்,  நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்வதாக அறிவித்தார் தென்சென்னை மாவட்ட அனைத்து சங்க பதிவாளர்.  மேலும் தேர்தல் நிறுத்துவதற்கான காரணத்தையும் அறிக்கையின் மூலம் வெளிப்படுத்தினார்.

தேர்தல் நிறுத்தப்பட்டது குறித்து, இரண்டு அணியை சேர்ந்தவர்களும், மாறி மாறி குறை கூறி கொண்டனர். இந்நிலையில் பாண்டவர் அணியினரை தொடர்ந்து,  இன்று காலை 11 மணி அளவில் பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினர் ஆளுநரை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.

இந்த சந்திப்பில் பாக்யராஜ், ஐசரி கணேஷ், குட்டி பத்மினி ,சங்கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  மேலும் நடிகர் சங்கம் தேர்தல் நடத்துவதற்கான இடம் மற்றும் யார் மேல்பார்வையில் நடத்துவது என்பது குறித்த ஆலோசனை நடந்ததாக கூறப்படுகிறது. 

நடிகர் சங்க தேர்தலுக்காக பாண்டவர் அணியினர் மற்றும் பாக்யராஜ் அணியைச் சேர்ந்தவர்கள் தமிழக முதல்வர்,  துணை முதல்வர், போன்ற யாரையும் சந்திக்காமல் நேரடியாக ஆளுநரை சந்தித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.