போயும் போயும் ஒரு கார்த்தி படத்துடன் மோதி மண்டையை உடைத்துக்கொண்டோமே என்று நடிகர் விஜய் ரசிகர்கள் மனதளவில் நொந்துபோயுள்ள நிலையில் ‘பிகில்’ 2ம் பாகம் எடுக்கப்படும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டு அவர்களது அடிவயிறு கலங்கவைத்திருக்கிறார் இயக்குநர் அட்லி.

தீபாவளிக்கு ரிலீஸான இரு படங்களில் இப்போதைக்கு வசூலில் விஜய்யின் ‘பிகில்’படம் முன்னணியில் இருந்தாலும் கைதி படத்துக்கு முன்னால் விமர்சன ரீதியாக அது மண்டியிட்டுவிட்டது என்பதே உண்மை. கைதியை விட 10 மடங்கு அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள ‘பிகில்’வசூலில் அப்படிப்பட்ட சாதனைகள் புரிய வாய்ப்பில்லை என்றும் தியேட்டர்காரர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் தயாரிப்பாளர் இழப்பீடு தரவேண்டியிருக்கும் என்றே இப்போதைக்கு சொல்லப்படுகிறது. ஏனெனில் இரு படங்களின் ரிலீஸ்ம் மூன்றாவது நாளை எட்டியுள்ள நிலையில் கைதியின் வசூல் கூடி வருவதாகவும் பிக்லின் வசூல் குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இப்படி கைதிக்குக் கிடைத்திருக்கும் அமோக வரவேற்பால் அப்படத்தை இந்தி உள்ளிட்ட மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய கடும் போட்டி நிலவி வருகிறது. அதே போல் இப்படத்தின் பார்ட் 2 எடுக்க வாய்ப்புள்ளதாகவும் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் தரப்பு உறுதி செய்துள்ளது.

இந்நிலையில் நிஜமாகவே அப்படி ஃபீல் பண்ணினாரா அல்லது இயக்குநரை நக்கல் அடித்தாரா என்று தெரியவில்லை. விஜய் ரசிகர் ஒருவர்,...தலைவா ‘பிகில் 2’எடுங்க...என்று உசுப்பேற்ற அதை சீரியஸாக எடுத்துக்கொண்ட அட்லியும் தனது ட்விட்டர் பக்கத்தில்,...செஞ்சுட்டா போச்சி நண்பா...என்று பதில் அளித்திருக்கிறார். அதற்கு வெகுண்டெழுந்து கமெண்ட் போட்டிருக்கும் விஜய் ரசிகர்கள்,...அய்யா சாமி நீ ஏற்கனவே விஜய் அண்ணாவுக்கு செஞ்சது போதும். சீக்கிரம் பாலிவுட்டுக்கு ஓடி தப்பிச்சுக்கோ’என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.