இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், கடந்த வருடம் அக்டோபர் மாதம் வெளியான திரைப்படம் அசுரன். இந்த படத்தில் நடிகர் தனுஷ் தன்னுடைய முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் மிரட்டி இருந்தார். 

கலைப்புலி எஸ்.தாணு இந்த படத்தை தயாரித்திருந்தார். இப்படம் வெளியாகி 100 நாட்களை வெற்றிகரமாக திரையரங்கங்களில் ஓடி வருவதற்கு தயாரிப்பாளர் எஸ். தாணு தன்னுடைய நன்றிகளை தெரிவிக்குமாறு ட்விட் செய்துள்ளார்.

சமீபகாலமாக ஒரு திரைப்படம் நான்கு நாட்கள் தியேட்டரில் ஓடினாலே அதிசயமாக பார்க்கப்பட்டு வரும் இந்நிலையில், தனுஷ் அசுரன் 100 நாட்களை கடந்து சாதனை செய்துள்ளது.  மேலும் வசூலிலும்  இப்படம் 50 கோடி வசூலித்துள்ளது.

வெக்கை என்கிற நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.  இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடித்து இருந்தார். மேலும் தனுஷின் சிறிய வயது மகனாக பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான கருணாஸின் மகன் கென் கருணாஸ் நடித்திருந்தார்.

பெரிய வயது மகனாக பிரபல இண்டிபென்டென்ட் சிங்கர் டிஜே நடித்திருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான  இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருந்தார். ராமர் படத்தொகுப்பு மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே தனுஷின் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் திரைப்படம் தேசிய விருதை பெற்ற நிலையில், இப்படமும் பல்வேறு விருதுகளை வாங்கி குவிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும் இப்படம் 100 நாட்களை எட்டிய சந்தோஷத்தை தயாரிப்பாளர் தாணு வெளிப்படுத்தியதை தொடர்ந்து தனுஷின் ரசிகர்கள் இந்த தகவலை கொண்டாடி வருகின்றனர்.

மேலும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தனுஷின் 'பட்டாஸ்' திரைப்படம் ஜனவரி 16 ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.