2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலுக்கு முன்பாக தம்மைக் கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக முன்னணி நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாண் கூறியுள்ளார். தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் இளைய சகோதரர் பவன்கல்யாண். இவர் பவர் ஸ்டார் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர். தனது அண்ணனை போலவே அரசியலில் குதிக்க நினைத்தவர் கடந்த 2014-ம் ஆண்டு ஜன சேனா என்ற கட்சியைத் தொடங்கினார். அப்போது நடைபெற்ற ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் பவன் கல்யாண் போட்டியிடவில்லை. 

மாறாக பாஜக கூட்டணியில் இருந்த தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு இவர் ஆதரவு தெரிவித்தார். மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள இவர் தேர்தலில் போட்டியிடாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் சந்திரபாபு நாயுடுவின் செயல்பாடுகளில் அதிர்ச்சியடைந்த பவன் கல்யாண் கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் அவர் தற்போது இருந்தே தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். 

அந்த வகையில் மேற்கு கோதாவரி சென்ற அவர் பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது தம்மை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டு இருப்பதாக அவர் கூறியதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. தன்னை கொலை செய்வது தொடர்பாக மூன்று பேர் பேசிக்கொள்ளும் ஆடியோ தனக்கு கிடைத்திருப்பதாகவும் பவன் கல்யாண் தெரிவித்தார். 

ஆனால் இதற்கெல்லாம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை என்று கூறியுள்ள பவன் கல்யாண் முன்கூட்டியே இதற்கெல்லாம் தயாராகி விட்டு தான் அரசியலுக்கு வந்துள்ளதாக சவால் விடுத்தார். எனவே பணம், அதிகாரம், கொலை, மற்றும் மிரட்டல் போன்றவற்றை பயம் இன்றி எதிர் கொள்ளப் போவதாகவும் தமது இறுதி மூச்சு உள்ளவரை மக்களின் உரிமைகளுக்காக போராட உள்ளதாகவும் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.