நடிகர் ஆர்யா தன்னுடைய மனைவி சாயிஷா உடன், இணைந்து, நடித்துள்ள 'டெடி' திரைப்படம் மார்ச் 12ஆம் தேதி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள நிலையில், ஆர்யா அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஆர்யா தற்போது இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியுள்ள, 'டெடி' திரைப்படத்தை இயக்கியுள்ளார். கற்பனைக்கு அப்பாற்பட்ட கதையம்சத்துடன் உருவாகியுள்ள இந்த படத்தில், ஒரு பொம்மையை மையமாக வைத்தே நகர்கிறது. எப்படி ஒரு பொம்மைக்கு உயிர் வருகிறது, அதன் பின்னணி என்ன என்று, மருத்துவரான ஆர்யாவுக்கு உண்மை தெரியவர, அதனை தடுக்க களத்தில் குதித்து ஆக்ஷனிலும் கலக்குகிறார் ஆர்யா. சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து ஆர்யாவின் கைவசம் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடித்துள்ள 'சார்பட்டா பரம்பரை', நடிகர் விஷாலுடன் நடித்துள்ள 'எனிமி' ஆகிய படங்கள் உள்ளன.  தற்போது பிரபல இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் ஆர்யா நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாளைய இயக்குனர் என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான, நலன் குமாரசாமி இயக்கிய முதல் படமான 'சூதுகவ்வும்' வேற லெவலுக்கு ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆனது. பின்னர் மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து 'காதலும் கடந்து போகும்' படத்தை இயக்கினார். சமீபத்தில் இவர் இயக்கிய அந்தாலஜி வெப் சீரியஸான 'குட்டி ஸ்டோரி'க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் மூன்றாவதாக அவர் இயக்கவுள்ள திரைப்படத்தில் நடிகர் ஆர்யா ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.  இதுகுறித்த அதிகார பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.