ஒரு கதாநாயகன் போலீஸ் அதிகாரியாக நடிப்பதும், அதனை மக்கள் ஏற்பதும் சுலபமான காரியம் அல்ல. அதுவும் பல ஆண்டுகளாக பல படங்களில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரங்களில் நடித்து வெற்றிகளை குவிக்க மிகப்பெரிய உழைப்பும் திறமையும் அவசியம். 

அந்த சாதனையை செய்து வருகிறவர்  'ஆக்ஷன் கிங்' அர்ஜுன். போலீசாக நடிப்பதில் அவருக்கு நிகர் அவரே. சினிமா துறைக்கு நடிகனாக வந்து முப்பத்திரண்டு ஆண்டுகள் ஆகியும், இன்றும் அதே துள்ளலோடும், ஸ்டைலுடனும், பொறாமைப்படவைக்கும் உடற்கட்டோடும் இருந்து வரும் அர்ஜுனின் 150வது படமான 'நிபுணன்' வரும் ஜூலை 28 அன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீஸாகவுள்ளது.

இது குறித்து அவர் பேசுகையில், ''எனது சினிமா வாழ்க்கையில் பல தடைகளை சந்தித்து வெற்றிகளை கண்டவன் நான். இதற்கு முன்பு பல முறை போலீஸ் அதிகாரியாக நான் நடித்திருக்கிறேன். அவை எல்லாவற்றிலும் இருந்து 'நிபுணன்' மிகவும் வித்தியாசமானது. அதன் திரைக்கதை அவ்வளவு  சுவாரஸ்யமானது. இது ஒரு சராசரி போலீஸ் திரில்லர் கிடையாது. முற்றிலும் வேறுபட்ட கோணத்தில் இக்கதை கூறப்பட்டுள்ளது. புலனாய்வு துறையின் DSP யாக இதில் நடித்துள்ளேன். 

உடலிலும் அறிவிலும் பலம் வாய்ந்த இந்த கதாபாத்திரத்திற்கு எல்லோரை போலவும் தனக்கென ஓர் பலவீனமும் இருப்பது ஒரு சுவாரஸ்யம். தனது தனிப்பட்ட வாழ்க்கையும் தொழில் வாழ்க்கையும் எவ்வாறு சமநிலை செய்கிறார் இந்த போலீஸ் அதிகாரி என்பதை படம் பார்க்கும் எல்லோரும் தங்கள் வாழ்க்கையுடன்  சம்பந்தப்படுத்திக்கொள்ளும் வகையில் மிக திறமையாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர். 

 28 முதல் மக்களும் எங்கள் 'நிபுணன்' படத்தை நிச்சயம் ரசிப்பார்கள் என நம்புகிறேன். இப்படத்தில் பிரசன்னா, வரலக்ஷ்மி மற்றும் ஸ்ருதி ஹரிஹரன், வைபவ், ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை மிக சிறப்பாக செய்துள்ளனர். எங்கள் அணியின் கடுமையான உழைப்பினால் வெற்றியின் வாசலை வந்தடைந்துவிட்டோம் என நம்புகிறேன்'' என கூறினார் அர்ஜுன்.