‘3’ படத்தில் இடம்பெற்ற ‘கொலவெறி’ பாடல் மூலம் உலக முழுவதும் அறியப்பட்ட தனுஷ்-அனிருத் கூட்டணி மீண்டும் இணையவிருக்கிறது.

தனுஷ் நடித்த ‘3’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இதை கம்போஸ் செய்த அனிருத் ரவிசந்தர் தன் 21 வயதில் திரையிசை உலகிற்குள் கால் எடுத்து வைத்து, இன்று தென்னிந்தியாவின் மிக முக்கிய  இசையமைப்பாளர் ஆகியிருக்கிறார். அனிருத்துக்கு ‘கொலவெறி’ பாடல் ஆகப்பெரிய விசிட்டிங் கார்டாக அமைந்தது. உலகின் அத்தனை திசைகளில் இருந்தும் நூறு மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்து பார்க்க வைத்து யுடியூபையே திணற வைத்திருக்கிறது. இதற்கு பிறகு  தென் இந்திய சினிமாவின் மோஸ்ட் வாண்டட் ஹீரோக்கள் பலரது படத்துக்கு இசையமைத்து உச்சம் தொட்டார்.

கடைசியாக விஜய் சேதுபதி நடித்த ‘நானும் ரௌடிதான்’ படத்திற்கு இசையமைத்தார். இந்தப் படங்களுக்குப் பிறகு இவர்கள் இருவரும் எந்தத் திரைப்படத்திலும் இணையவில்லை. இதை வைத்து தனுஷ், அனிருத் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது என்றும் அதனால்தான் சமீபகாலமாக இருவரும் இணைந்து படங்கள் பண்ணவில்லை என்றும் கோலிவுட்டில் பேச்சு நிலவிவந்தது.

இது குறித்து செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்த அனிருத், “எனக்கும் தனுஷுக்கும் இடையில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. மிக விரைவிலேயே, அதாவது 2019இல் நாங்கள் இருவரும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றவிருக்கிறோம்” என்று கூறியுள்ளார். இதனால் தனுஷும் அனிருத்தும் மீண்டும் இணைவது உறுதியாகியுள்ளது.  

தெலுங்கு நடிகர்களை இயக்குகிறாரா அட்லீ?  

மெர்சல் பட இயக்குனர் அட்லீ அடுத்ததாக தெலுங்குத் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய்யை கொண்டு அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்கிய அட்லீ இதுவரை மூன்று படங்கள் இயக்கியுள்ளார். மூன்றுமே சுப்பர் டூப்பர் ஹிட்டு. இவர் அடுத்ததாக எந்தக் கதாநாயகனை வைத்து இயக்கவுள்ளார் என்ற எதிர்பார்ப்பு உருவாகியிருந்த நிலையில் விஜய்யுடன் மூன்றாவது முறையாக இணையவுள்ளதாகத் தகவல் பரவியது. ஆனால் விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் பரபரப்பாக நடித்துக்கொண்டிருக்கும் நிலையில் இந்தக் கூட்டணி சில வருட இடைவெளிக்குப் பின் தொடரும் எனக் சொல்லப்பட்டது.

தற்போது கோலிவுட்டைப் போல டோலிவுட்டிலும் முத்திரை பதிக்க களமிறங்கிவிட்டதாகத் தகவல் பரவியிருக்கின்றது. தெலுங்குத் திரையுலகில் பவன் கல்யாண், அல்லு அர்ஜுன் ஆகியோரிடம் கால்ஷீட் இருப்பதால் இந்த இரு நடிகர்களில் அட்லீ இயக்குவார் எனத் தெரிகிறது.