விஜயின் அடுத்தபடமான ‘தளபதி 63’பட அப்டேட்ஸ்களுக்காக தொடர்ந்து டார்ச்சர் கொடுத்து சற்றே டயர்டாகியிருக்கும் ரசிகர்களுக்கு மகா ஆறுதலான செய்தி ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி.

பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில், விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். மேலும் அவர், தந்தை, மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருப்பதாகவும், அதில் மகன் கேரக்டரின் பெயர் பிகில் என்றும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. ஆனால் இப்படம் குறித்து தயாரிப்பாளர் தரப்பின் அதிகாரபூர்வ அற்விப்பு வந்து வெகுநாட்கள் ஆகிவிட்டன. ரசிகர்கள் தொடர்ந்து அப்டேட்ஸ்களுக்காக நச்சரித்து வந்ததையும் சில நாட்களாக நிறுத்திவிட்டனர்.

காரணம்,ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் மற்ற அப்டேட்களும் இனி  விஜய்யின் பிறந்தநாளான ஜுன் 22-ம் தேதியன்று வெளியாகும் என்று ரசிகர்கள் முடிவுகட்டிவிட்டனர்.

இதனிடையே விஜயின் பிறந்த நாளுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், படம் தொடர்பான தகவல்களை தெரிந்துகொள்ளவும் ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.அந்தவகையில் சமூகவலைதளங்களில் அப்டேட் கேட்கும் ரசிகர்களுக்கு ட்விட்டரில் பதிலளித்திருக்கும் படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, “நீங்கள் மறந்திருப்பீர்கள், தயாரிப்பாளரிடமிருந்து படத்தைப் பற்றிய அப்டேட் பெற்றுத் தருவது நானாகத்தான் இருப்பேன். ‘தளபதி 63’ படம் குறித்த அப்டேட் சரியான நேரத்தில் கிடைக்கும். உங்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய நாங்கள் இரவுபகல் பாராமல் உழைத்துக் கொண்டிருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.