ஏ. ஆர்.ரஹ்மானுக்கு இரண்டு ஆஸ்கார் விருதுகள் வாங்கித்தந்த ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தின் பத்தாண்டுகள் நிறைவை ஒட்டி மும்பையில் நடந்த விழா ஒன்றில் தனது தந்தை குறித்து பெருமையாகப் பேசினார் அவரது மகள் கதீஜா.

இந்தி நடிகர் அனில் கபூர்,கவிஞர் குல்சார், பாடகர் சுக்விந்தர் சிங் உட்பட பலரும் கலந்துகொண்ட ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ பத்தாண்டுகள் நிறைவு  விழாவில் ரஹ்மானும் அவரது மகளும் கலந்துகொண்டனர். துவக்கத்தில் குழந்தைகளாகிய எங்களுக்கு நல்ல அறிவுரைகள் எதாவது கூறுங்கள் என்று கேட்டுக்கொண்ட மகளுக்கும்  மற்ற குழந்தைகளுக்கும் ‘நான் எனது முன்னோர்களிடம் கற்றுக்கொண்ட நல்ல விசயங்கள் அத்தனையையும் உங்களுக்கும் கற்றுத்தர விரும்புகிறேன். இந்த இளம் வயதில் உங்கள் மனம் நல்லது என்று எதைச் சொல்கிறதோ அதை மட்டும் செய்யுங்கள்’ என்றார்.

அடுத்து நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக தனது தந்தை குறித்துப்பேசிய கதீஜா  “உங்களது இசைக்காகவும், நீங்கள் பெற்ற விருதுக்காகவும் உங்களை இந்த உலகம் அறியும். ஆனால் எங்களுக்கு  நீங்கள் கற்றுக்கொடுத்த விஷயங்களுக்காக நான் உங்கள் மீது அதீத அன்பும், மரியாதையும் வைத்திருக்கிறேன். உங்களது பணிவுதான் எனக்கு மிகவும் பிடித்தது.

ஆஸ்கர் விருது வென்ற பிறகும் உங்களது குணத்தில் எள்ளளவும் மாற்றமில்லை. ஆஸ்கர் விருது கடந்த 10 ஆண்டுகளில் உங்களில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. நீங்கள் எங்களுடன் செலவிடும் நேரம் மட்டுமே குறைந்துள்ளது. அதையும் சரிக்கட்டும் விதமாக தற்போது எங்களை சிறு சிறு பயணங்களுக்கு அழைத்துச் செல்கிறீர்கள். உங்களது பண்பால் நான் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளேன். நீங்கள் பல சமூகப் பணிகளையும் செய்கிறீர்கள். அதுபற்றி மக்களுக்கு, ஏன் எனக்குக் கூட தெரிய வருவதில்லை. இதுவே என் தந்தையிடம் நான் மிகவும் வியந்து பார்க்கக்கூடிய பண்பாக உள்ளது” என்று  அவர் ரகசியமாகச் செய்துவரும் பொதுச்சேவைகள் குறித்துப் பொதுமேடையில் போட்டுடைத்தார்.