நடிகர் விஜய் படங்களில் இதுவரை இல்லாத அதிசயமாக ‘தளபதி 64’படம் மெல்ல முழுக்க முழுக்க ஒரு இயக்குநர் படமாக மாறிக்கொண்டு வருகிறது. நேற்று நடிகர் விஜய் சேதுபதி அப்படத்தில் அதிகாரபூர்வமாக இணைந்ததைத் தொடர்ந்து இன்று மலையாளத் திரையுலகின் வளர்ந்து வரும் நாயகன் ஆண்டனி வர்கீஸும் அப்படத்தில் நடிக்கவுள்ளார். விஜய் படங்களில் தொடர்ச்சியாக முக்கியமான ஹீரோக்கள் கமிட் பண்ணப்படுவது திரையுலகினருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜயின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள ‘தளபதி 64’படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது. இது குறித்து நேற்று முன் தினம் அப்பட நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து மூன்று முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அதன் முதல் அறிவிப்பாக நேற்று அப்படத்தில் விஜய் சேதுபதி இணைந்தார்.

அதன் தொடர்ச்சியாக இன்று சற்றுமுன்னர் வெளியிடப்பட்ட அறிவிப்பில் மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் அப்படத்தில் கைகோர்த்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 2017ல் வெளிவந்த ‘அங்கமாலி டைரீஸ்’படத்தின் மூலம் எண்ட்ரி ஆன ஆண்டனி வர்கீஸ் இன்று கேரள சினிமாவின் முன்னணி நடிகர்களுல் ஒருவராக உள்ளார். அங்கமாலி டைரீஸ் படத்துக்குப் பின் வருடத்துக்கு ஒரு படம் என்கிற ரீதியில் மூன்று மலையாளப்படங்களில் மட்டுமே நடித்துள்ள ஆண்டனி வர்கீஸின் நான்காவது படம் ‘தளபதி 64’.

கடந்த மே1 உழைப்பாளர் தினத்தன்று, மகன் பெரிய நடிகன் ஆனபிறகும் இன்னும் ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றிக்கொண்டிருக்கும் தனது தந்தை குறித்த பதிவு ஒன்றை  பெருமையுடன் வெளியிட்டு லட்சக்கணக்கில் லைக்குகளை அள்ளியவர் ஆண்டனி வர்கீஸ்.