ஆளில்லா ஏர் டாக்ஸி தயாரிக்கும் திட்டத்தில் பணியாற்றிய நடிகர் அஜித்துக்கு கெளரவ ஆலோசகர் பதவி வழங்க அண்ணா பல்கலைக்கழகம் விருப்பம் தெரிவித்துள்ளது.

ட்ரோன் மூலம் வானில் பறக்கும் ஏர் டாக்சி கடந்த ஆண்டு துபாயில் அறிமுகமானது. இதெல்லாம் இந்தியாவில் சாத்தியமா என்ற கேள்வி எழுந்ததுபோது, அதை நடிகர் அஜித் குமார் தொழில்நுட்ப வழிகாட்டியாகக் கொண்ட தக் ஷா மாணவர் குழு சாத்தியப்படுத்தியது. இக்குழு இந்தியாவில் முதன் முறையாக ட்ரோன் மூலம் வானில் பறக்கும் ஏர் டாக்ஸியைத் தயாரித்தது. 

இதன் சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நிறைவுற்றது. இதனால், நடிகர் அஜித் குமாருக்கும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பாராட்டு குவிந்தது. இந்தத் திட்டப் பணி முழுமையாக முடிந்துவிட்ட நிலையில் நடிகர் அஜித் குமாருக்கு பாராட்டு தெரிவித்து, அண்ணா பல்கலைக்கழகம் கடிதம் எழுதியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஏர் டாக்ஸி தயாரிக்கும் திட்டத்தில் பங்கேற்று 10 மாதங்களாகப் பணியாற்றிய நடிகர் அஜித்தின் பங்களிப்பை  இந்தக் கடிதத்தில் அண்ணா பல்கலைக்கழகம் பாராட்டியுள்ளது. அந்தக் கடித்ததில் வருங்காலத்தில் விருப்பம் இருந்தால் கெளரவ பதவியில் ஆலோசகராகப் பணியாற்ற வேண்டும் என்று அஜித் குமாரிடம் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.