நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்ட ஏராளமானோர் பல ஆயிரம் கோடி ரூபாய்களை கடனாகப் பெற்று அதனை திருப்பி செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டனர்.  அவர்களை எல்லாம் விட்டுவிட்டு ஏழை எளிய விவசாயிகள் பெற்றுள்ள பயிர்கடன்களை வங்கிகள் விரட்டி விரட்டி வாங்கி வருகின்றன.

இந்நிலையில் நாட்டின் பல பகுதிகளில் மழையின்மை மற்றும் அளவுக்கதிமான மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பயிர்கள் நாசமானதால் ஏராளமான விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

குறிப்பாக, வட மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் விவசாயம் பொய்த்துப் போனதுடன், வங்கிக்கடனும் சேர்ந்து தலைமேல் பாரமாகி விட்ட மனவேதனையில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து உயிரை மாய்த்து கொள்கின்றனர்.

சில மாநிலங்கள் ஓரளவுக்கு விவசாயக் கடனை தள்ளுபடி செய்திருந்தாலும், பரவலாக வங்கிக் கடன்களால் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் திணறி  வருகின்றனர்.

இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த சுமார் 850 விவசாயிகளின் வங்கிக் கடன்களை தனது சொந்தப் பணத்தில் இருந்து செலுத்த இந்தி நடிகர் அமிதாப் பச்சன் முன்வந்துள்ளார்.

இதற்கு முன்னர் மகாராஷ்டிரம் மாநிலத்தை சேர்ந்த சுமார் 350 விவசாயிகளின் வங்கிக் கடன்களை அடைத்துள்ள அமிதாப் பச்சன், தன்னால்  இயன்ற இந்த சிறிய உதவி இதர மாநிலங்களிலும் தொடரும்’ என தனது  பிளாக்கில் தெரிவித்துள்ளார்.

நடித்து சம்பாதித்த பணத்தை வெளிநாடுகளிலும், சுவிஸ் வங்கிகளிலும் பல நடிகர்கள் பதுக்கி வரும் நிலையில் நடிகர் அமிதாப் பச்சன் தொடர்ந்து பல விவசாயிகளின் கடன்களை அடைத்து அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகிறார். இதையடுத்து நடிகர் அமிதாப் பச்சனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.