தீவிரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதலால் உயிரிழந்த 49 ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கவிருப்பதாக அறிவித்து இந்தியாவின் தலை சிறந்த நட்சத்திரம் தான்தான் என்பதை நிரூபித்திருக்கிறார் அமிதாப் பச்சன்.

ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு நேற்றுமுன்தினம் மாலை துணை ராணுவப்படையினர் 2,500 பேர் 90க்கும் மேற்பட்ட பேருந்தில் சென்றனர். புல்வாமா மாவட்டம் அவந்திபோரா நெடுஞ்சாலையில் பேருந்து வந்த போது 5-வது வரிசையில் சென்றுகொண்டிருந்த பேருந்து மீது 150 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து பொருட்கள் நிரப்பப்பட்ட காரை மோதச் செய்து ஜெய்ஷ்- இ- முகமது அமைப்பின் தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினார். இதில் 49சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் கொல்லப்பட்டனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்செய்தியால் பெரும் மனக்கொந்தளிப்புக்கு ஆளான இந்தியின் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் கடந்த இரு தினங்களாக தான் கலந்துகொள்வதாக இருந்த படப்பிடிப்புகள் மற்றும் கிரிக்கெட் வீரர் வீராத் கோலியின் இல்ல நிகழ்ச்சி ஒன்று உட்பட அத்தனையையும் ரத்து செய்தார். மற்ற நடிகர்களெல்லாம் வெறும் இரங்கல் அறிக்கைகள் கொடுத்துவரும் நிலையில், தனது தேசபக்தியை நிரூபிக்கும் வகையில் வெடுகுண்டு தாக்குதலில் மரணம் அடைந்த அத்தனை வீரர்கள் குடும்பத்தினருக்கும் உடனடியாக தலா 5லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.