இவர்கள் உண்மையில் ரசிகர்கள்தானா அல்லது வெறியர்களா என்று சந்தேகப்படும் அளவுக்கு மீண்டும் அஜீத் ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் வலைதளப் பக்கங்கள் மிக மட்டமான கல் ஒருவரை ஒருவர் வசைபாட ஆரம்பித்துள்ளனர். இவர்களின் தரங்கெட்ட எல்லை மீறிய மோதலால் அஜீத்,விஜய் இருவருமே பயங்கர அப்செட்டில் இருப்பதாகத் தெரிகிறது.

தங்களுக்குப் பிடித்தமான நடிகர்களுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு தருவதைத் தாண்டி பிற நடிகர்களை இழிவாக விமர்சித்து ட்ரெண்ட்  செய்யும் மனநிலை தமிழக இளைய தலைமுறையினரிடம் சமீப நாட்களாக அதிகமாகப் பரவி வருகிறது.அந்த வகையில் கடந்த மாதம் நடிகர் விஜய்யின் பிறந்த நாளுக்கு முன்னர் நடிகர் அஜித்தின் ரசிகர்கள்,  விஜய் இறந்ததாக வேண்டுமென்றே சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்தனர். இந்த ட்ரெண்ட் சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளான  நிலையில் இதற்கு பதிலடியாக விஜய் ரசிகர்கள் #LongLiveAjithkumar என்று சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து அனைவரது பாராட்டையும் பெற்றனர். 

அந்தப் பிரச்சினை தற்காலிகமாக அப்போது முடிவுக்கு வந்த நிலையில், அஜித்தின் திரைப்படம் 'நேர்கொண்ட பார்வை' அடுத்த வாரம் வெளியாக உள்ளதை ஒட்டி மீண்டும் இரு தரப்புக்கு மத்தியில் பெரும் பஞ்சாயத்து துவங்கியுள்ளது. அந்தப் படத்தை விமர்சித்து இழிவுபடுத்தும் வகையில் #ஆகஸ்ட்8_பாடைகட்டு என்று விஜய் ரசிகர்கள் நேற்று ட்ரெண்ட் செய்தனர். இதற்கு பதிலடியாக அஜித் ரசிகர்கள் மீண்டும் #RIPactorVIJAYஎன்ற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்ட் செய்தனர்.  ஒருவரை நக்கலடிப்பதற்கும் வெறுப்பைக் கக்குவதற்கும் இடையில் உள்ள வித்தியாசம் கூட தெரியாத இவர்களை என்னவென்று சொல்வது?