விஸ்வாசம் எட்டே நாளில் 125 கோடி, பேட்ட 11வது நாளில் 100 கோடி என்று பரப்பப்படும் இரண்டு செய்திகளுமே அடிப்படை ஆதாரமற்ற பொய்க்கணக்குகள். இதில் வசூலின் உண்மைத்தன்மையைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் அஜீத், ரஜினி ஆகிய இருவரில் யார் பெரியவர் என்ற மலிவான போட்டி மட்டுமே முன்வைக்கப்படுகிறது என்கின்றனர் தியேட்டர் உரிமையாளர்கள்.

தமிழ்த்திரையுலகம் முன்னெப்போதும் காணாத ஒரு பெரும் போட்டியாக மாறியது அஜித், ரஜினி படங்களின் ரிலீஸ். இதில் துவக்கத்திலிருந்தே இரு தரப்பினரும் ரசிகர்களுக்கு மண்டையில் சூடு ஏற்றிக்கொண்டே இருந்தனர். தம் படத்துக்கு புரமோஷன் பண்ணுவதை எதிர்தரப்புக்கு பதிலடி தருவதற்கே ட்ரெயிலர்களும், டீசர்களும் தயாரிக்கப்பட்டன.

படம் ரிலீஸாகி பத்து நாட்களாகியும் கொஞ்சமும் சூடு குறையாமல் இரு அணிகளுக்கிடையேயான சண்டை தொடர்ந்துகொண்டிருந்த நிலையில் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்படுவதாக நினைத்து பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியத்தை தனது ‘பேட்ட’ படத்துக்கு சாதகமாகப் பேசவைத்து வீடியோ வெளியிட்டார் ரஜினி. அத்தோடு நில்லாமல் படம் எட்டாவது நாளைத் தொட்டுக்கொண்டிருந்த நிலையில் ‘இந்தப் படம் 11 வது நாளில் 100 கோடி வசூலைத் தொடும் என்று அதே சுப்பிரமணியை வைத்து கிளி ஜோஸ்யம் சொல்ல வைத்தார் ரஜினி.

இது அஜீத் குரூப்புக்கு எரிச்சலை ஏற்படுத்தவே ‘நீங்களாவது 11 வது நாள்ல 100 கோடி. நாங்க 10 வது நாள்லயே 125 கோடி என்று எகத்தாளம் செய்தனர். அத்தோடு நில்லாமல் ‘உங்க மேல கொல கோபம் வரணும். ஆனா உங்களை எனக்கு பிடிச்சிருக்கு சார் ‘ என்று ஒரு ஸ்பெஷல் டீசரையும் இதற்கு பதிலளிப்பதற்காகவே வெளியிட்டனர்.

ஆனால் உண்மையில் இரு படங்கள் நிலவரமும் இதுவரை சுமார்55 முதல் 60 கோடி வசூல் அளவுக்கே இருப்பதாகவும், இரண்டாவது வாரத்தில் இரு படங்களுமே வசூலில் பாதிக்குப் பாதி இறங்கி டல்லடிக்கத் துவங்க்யிருப்பதாகவும் தியேட்டர் வட்டாரங்கள் புலம்புகின்றன.

இத்தகவலை உறுதி செய்யும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னாள் இணைச்செயலாளர் திருச்சி ஸ்ரீதர்,’’இரண்டு படம் சம்பந்தப்பட்டவர்களும் வெளியிடும் 100கோடி, 125 கோடி வசூல் என்பது முற்றிலும் சாத்தியமில்லாதது. வரும் திங்கட்கிழமை இதன் உண்மை நிலவரத்தை வெளியிடுகிறேன்’ என்கிறார். அதுக்குள்ள ‘பேட்ட’ 200 கோடியையும், ‘விஸ்வாசம்’ 250 கோடியையும் எட்டாமலிருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்வோம்.