’ஒரு முடிவு எடுத்துட்டா என் பேச்சை நானே கேக்க மாட்டேன்’ என்கிற மைண்ட் வாய்சுடன் தனது படம் தொடர்பான நிகழ்ச்சிகள் உட்பட எந்த சினிமா நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளாமல் தவிர்த்து வந்த அஜீத், நீண்ட நெடுங்காலத்துக்குப் பின்னர் கமல் 65’ நிகழ்வில் கலந்துகொள்ளவிருப்பதாக ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சாதா ஸ்டாரிலிருந்து அல்டிமேட் ஸ்டார் ஆன பிறகு அஜீத் சினிமா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை முற்றிலும் தவிர்த்து வந்தார். அதில் அவர் சம்பந்தப்பட்ட பட நிகழ்ச்சிகளும் அடக்கம். இது தொடர்பாக முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதியிடம் ‘ஐயா என்னை ஃபங்சனுக்கு வரச்சொல்லி மிரட்டுறாங்கய்யா’என்று ஒரு முறை மேடையிலேயே புலம்பித் தீர்த்தார். அந்த மேடையோடு எந்த நிகழ்ச்சிகளிலும் அஜீத் கலந்துகொள்வதில்லை. அதே போல் எந்த பத்திரிகையாளரையும் சந்திப்பதில்லை என்பதையும் வாழ்வின் முக்கிய வைராக்கியங்களுல் ஒன்றாக வைத்துள்ளார்.

இந்நிலையில் வரும் 17ம் தேதி நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவிருக்கும் கமல் 65’இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு அஜீத்துக்கு கமல் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகவும் அந்நிகழ்வில் தான் கண்டிப்பாக கலந்துகொள்வேன் என்று அல்டிமேட் உறுதியளித்திருப்பதாகவும் மக்கள் நீதி மய்ய வட்டாரங்கள் மய்யமாகத் தெரிவிக்கின்றன. இந்திய சினிமாவின் அத்தனை பிரபலங்களும் கலந்துகொண்டு கமலைக் கவுரவிக்கவிருக்கும் அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தன் சுய கவுரவத்தை அஜீத் காப்பாற்றிக்கொள்வார் என்று நம்புவோம்.