படத்தின் பெயர் என்னதான்  ’நேர்கொண்ட பார்வை’யாக இருந்தாலும் நாங்கள் குறுக்கு வழியில் திருட்டுத்தனமாக இணையதளங்களில் படத்தை வெளியிடுவதை நிறுத்தமாட்டோம் என்று வீராப்பு காட்டி வரும் தமிழ் ராக்கர்ஸ் நேற்று இப்படத்தையும் சுடச்சுட ரிலீஸ் செய்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அஜீத் ரசிகர்கள் கொதித்துப்போயுள்ளனர். தயாரிப்பாளரும், அஜீத்தும் படக்குழுவினரும் வழக்கம்போல் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

நேர்கொண்ட பார்வை படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நேற்று ரிலீஸ் ஆனது.இந்தப் படத்தின் பிரிவியூ, இரு தினங்களுக்கு முன்பு கடந்த 6ம் தேதியன்று  சிங்கப்பூரில் வெளியிடப்பட்டது. அதையொட்டி படத்தின் சில பகுதிகள் எப்படியோ கசிந்து தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியானது. அதையும் தாண்டி நேற்று (ஆகஸ்ட் 8) தியேட்டர்களில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்திற்கு ரசிகர்கள் அமோக ஆதரவு கொடுத்தனர். பெண்கள் தரப்பு நியாயத்தை அஜீத் பேராண்மையுடன் பேசியிருப்பதாக விமர்சகர்கள் பாராட்ட, அஜீத் ரசிகர்களுக்கு உற்சாகம் தொற்றிக்கொண்டது.

திரையுலக பிரபலங்கள் பலரும், இந்தப் படத்தின் வித்தியாசமான கதையை பெரிதும் பாராட்டி வருகிறார்கள். பாலியல் புகார், அதைத் தொடர்ந்து அவதூறுகளுக்கு ஆளான பெண்களுக்காக அஜீத் போராடும் கதாபாத்திரத்தில் வருகிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் விஸ்வாசம் படத்தை பிளாக் பஸ்டர் ஹிட்டாக கொடுத்த அஜீத், இந்தப் படத்தையும் மெஹா ஹிட்டாக கொடுத்திருப்பதாக விமர்சனங்கள் வந்திருக்கின்றன.

இந்தச் சூழலில்தான் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் அஜீத்தின் ’நேர்கொண்ட பார்வை’ படத்தை முழுமையாக வெளியிட்டது. இது அஜீத் ரசிகர்களை மட்டுமன்றி, சினிமா உலகத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அவ்வப்போது இணையதள முகவரியை மாற்றிக்கொண்டு, தமிழ் ராக்கர்ஸ் செய்யும் அட்டகாசத்தை திரையுலகம் தடுக்க முடியாமல் தவிப்பது சோகம் என்பது ஒருபுறமிருக்க சமீப காலமாக தமிழ்ராக்கர்ஸை எதிர்த்து ஒரு சம்பிரதாயத்துக்காக ஒருவரும் அறிக்கை கூட கொடுப்பதில்லை என்பது இன்னும் பரிதாபத்துக்குரியது.