பேட்ட 11வது நாளில்தான் 100 கோடி வசூலிக்கிறது, நாங்கள் இன்றே 125 கோடியைக் கடந்துவிட்டோம் என்று விஸ்வாசம் விநியோகஸ்தர் போட்டிப் போட்டுக்கொண்டு வசூல் விவரத்தை வெளியிட்டுள்ளனர்.

தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை ஒரு படத்திற்கு என்ன வசூல் ஆனது என்று வெளிப்படை தன்மையுடன் தனிப்பட்ட தயாரிப்பாளரோ, விநியோகஸ்தர்களோ, புதிதாக தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் கார்ப்பரேட் கம்பெனிகளோ இதுவரை அறிவித்ததில்லை.

மூன்று நாட்களில் 100 கோடி வசூல் என விளம்பரப்படுத்துவார்கள், படம் தியேட்டரை விட்டு வெளியில் ஓடினாள் தான் தெரியும், ஒப்பாரி வைப்பார்கள் நடிகரின் அடுத்த படத்துக்கு போர்க்கொடி தூக்கி அந்த நடிகரின் வீட்டை முற்றுகையிடுவதாக காலம் காலமாக தமிழ் சினிமாவில் இப்படித்தான் நடந்து  வருகிறது.

 

இதுவரை, எந்த தயாரிப்பாளரும் வெளியிடும் வசூல் உண்மையானது என்று சொல்ல முடியாது.  இந்நிலையில் ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் இரண்டு படங்களின் வசூல் நிலவரம் குறித்து சமூக வலைத்தளங்களில் கடும் மோதல் நடந்து வருகிறது. 

இதுகுறித்து இரு படங்களின் தயாரிப்பாளர்களுமே  பதிலடி கொடுத்த சம்பவங்களும் அரங்கேறியது. இந்நிலையில், நேற்று பேட்ட படத்தின் தயாரிப்பாளர்கள், படத்தின் வெளிநாட்டு வினியோகஸ்தர் மாலிக் வெளிநாடுகளில் படம் 65 கோடி வசூலித்துள்ளது என்று  ஒரு வீடியோ வெளியிட்டனர்.

போதாத குறைக்கு, தியேட்டர் உரிமையாளர் திருப்பூர் சுப்பிரமணியம் பேட்ட படம்  வரும் ஞாயிறுக்குள் 100 கோடி  வசூல் சாதனை படைக்கும். தமிழ்நாட்டிலேயே மிகக் குறைந்த நாட்களில் ஒரு படம் 100 கோடி வசூலைக் கடப்பது இதுவே முதல் முறை என அடுத்த குண்டைப்போட்டார். அதுமட்டுமா, தமிழ்நாட்டில் எந்த ஒரு படமும் வெறும் 11 நாட்களில் 100 கோடி வசூலித்தது இல்லை எனக் கூறினார்.

அதாவது, விஸ்வாசம் இன்னும் தமிழகத்தில் 100 கோடி வசூலை கடக்கவில்லை என மறைமுகமாக  சொல்வதைப்போலவே இருந்தது.  ஆனால் இதற்கு முன்பே விஸ்வாசம் படத்தின் தமிழ்நாடு விநியோகஸ்தரான "கேஜேஆர் ஸ்டுடியோஸ்" விஸ்வாசம் படம் 125 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

இதெல்லாம் உண்மையா? என இரண்டு படத்தின் தியேட்டர் உரிமயாளர்களிடம் கேட்டால்  நமுட்டு சிரிப்புடன்  அதெல்லாம் சும்மா என சொல்கிறார்கள். சரி 11வது நாளில் பேட்ட படம்  100 கோடி வசூலிக்கும் என்று  கேட்டால் கைதட்டி பலமாக சிரிக்கிறார்கள்.  தமிழ்நாடு முழுவதும் இரண்டு படங்களும் திரையிட்ட தியேட்டர்களில் 50% இருக்கைகள் காலியாக உள்ளன. அப்புறம் எப்படி 100 கோடி?