தமிழ் சினிமாவில் ஒரே கதை கொண்ட படங்கள் இடைவெளி விட்டு எடுக்கப்படுவது  இயல்பாகி விட்டது.  ஆனால் ஒரே நேரத்தில் சில முன்பின் ஒரே கதையை கொண்ட படங்கள் உருவானால்..? அதுவும் ரஜினி நடித்த படக்கதையை ஒட்டியே அஜித் நடித்து வரும் படக்கதையும் எடுக்கப்பட்டால்..? 

தர்பார் படம் ரிலீஸாகும் வரை வலிமை பட இயக்குநர் ஹெச்.வினோத் மனதில் இப்படியொரு கவலை ஆட்டிப்படைத்து வந்தது.  ரஜினியின் தர்பார் கதையும் இவர் இயக்கிக் கொண்டிருக்கும் வலிமை கதையும் ஒன்றுதான் என்கிற சந்தேகம் வந்துவிட்டதாம். காரணம் வலிமை படத்திலும் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். தர்பார் படத்திலும் ரஜினி போலீஸ் அதிகாரி. இரண்டு படங்களின் பின்னணியும் மும்பையை கதைக்களமாக கொண்டது. 

இருபடங்களின் படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் ஒரே நேரத்தில் ஒரு சில காட்சிகள் ஷூட் செய்யப்பட்டன. அதற்காக ஷுட்டிங்கை நிறுத்தி விடவா முடியும்? அஜீத்தை வைத்து பில்டப் காட்சிகள், சண்டை காட்சிகளை படமாக்கிக் கொண்டிருந்தார்  ஹெச்.வினோத். மெயின் கதைக்குள் போக வேண்டும் என்றால், தர்பார் படம் ரிலீசாகி அவரது சந்தேகம் தீர வேண்டும். அதற்காக தர்பார் ரிலீஸ் வரை காத்திருந்தார் ஹெச்.வினோத். 

படம் ரிலீஸான முதல் நாள் முதல் காட்சிக்கு பதறியடித்துக் கொண்டு ஓடிப்போய் தர்பாரை பார்த்துள்ளார் விநோத். படம் பார்த்து முடித்த பிறகு... அப்பாடா என நிம்மதி பெருமூச்சு விட்டபடி வெளியே வந்திருக்கிறார். யெஸ்... தர்பார் கதைக்கும், வலிமை படக்கதைக்கும் சம்பந்தமே இல்லை.