இன்று காலையே நாம் அறிவித்தபடி சற்றுமுன்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் அஜீத், ஹெச்.வினோத் கூட்டணியின் நேர்கொண்ட பார்வை பட ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அற்வித்தார் தயாரிப்பாளர் போனிகபூர்.

ஆகஸ்ட் 10ம் தேதியாக அறிவிக்கப்பட்டு, பின்னர் மீடியாக்களால் ஆகஸ்ட் 1ம் தேதி என்று குழப்பப்பட்ட அஜீத்தின் ‘நேர்கொண்ட பார்வை’யின் உறுதியான ரிலீஸ் தேதியை இன்று மாலை 6 மணிக்கு தயாரிப்பாளர் போனிகபூர் வெளியிடுவார் என்று இன்று காலையே நமது இணைய தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதன்படி ஆகஸ்ட் 8ம் தேதி வியாழனன்று படம் ரிலீஸாகவிருப்பதை போனி கபூர் தற்போது அறிவித்துள்ளார்.
தீபாவளிக்கு வெளியாக இருக்கும் விஜய்யின் ‘பிகில்’படத்துக்கும் இன்னும் மூன்றே வாரங்களில் ரிலீஸாகவிருக்கும் அஜீத்தின் நேர்கொண்ட பார்வைக்கும் மத்தியில் ஃபர்ஸ்ட் லுக், போஸ்டர் வெளியிடுவது ,ட்ரெயிலர் மற்றும் டீஸர் வெளியிடுவதில் பலத்த போட்டிகள் நிலவுகின்றன. விஜய்யின் ‘பிகில்’ தீபாவளி ரிலீஸ்தான் என்று உறுதியாகத் தெரிந்துள்ள நிலையில் அஜீத்தின் ‘நேர்கொண்ட பார்வை’யின் ரிலீஸ் தேதியில் இன்று வரை குழப்பம் நீடித்து வந்தது.

படக்குழுவினர் ஆகஸ்ட் 10 என்று ரிலீஸ் தேதியை அறிவித்திருந்த நிலையில் அது சனிக்கிழமையாக இருக்கிறது. ராசியில்லாத நாள். அதற்கு முந்தைய புதன்,வியாழன், வெள்ளி வசூல்களை ஏன் இழக்க வேண்டும் என்று ஆளாளுக்குக் குழப்பி வந்தனர். இந்நிலையில் இன்று காலை அஜீத் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தயாரிப்பாளர் போனிகபூர் 8ம் தேதி வியாழக்கிழமையை உறுதி செய்திருக்கிறார்.

இந்த அறிவிப்பு 6 மணிக்கு என்று அறிவிக்கப்பட்டு சுமார் 10 நிமிடங்கள் தாமதமானதால் அஜீத் ரசிகர்கள் படக்குழுவினரை படுபயங்கர டார்ச்சர் செய்து வந்தனர்.