கடந்தவாரம் பூஜை போடப்பட்ட ‘தல 59’ படத்தில் அஜீத், அமிதாப் நடித்த வயதான வேடத்தில் நடிக்கப்போகிறாரா அல்லது அவருக்கென படத்தில் வேறெதுவும் புதிய கேரக்டர் உருவாக்கப்படுகிறதா என்ற குழப்பங்களுக்கு விடைகிடைத்துள்ளது. யெஸ்.. அமிதாப் நடித்த வயதான வக்கீல் வேடத்தில் முழு நரையுடன் தான் நடிக்கவிருக்கிறார் தல.

‘பிங்க்’ போன்ற ஒரு சீரியஸான படத்தையெல்லாம் தல ரசிகர்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை என்பதால் அப்படத்தின் கதையை தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் சற்றே நீளமான இப்பதிவை வாசிக்கலாம்.

இனி படத்தின் கதையை, திரைக்கதையைப் பார்ப்போம். மூன்று இளம் பெண்கள் – மூன்று இளைஞர்களுக்கு இடையிலான நட்பு மற்றும் அதனை தொடர்ந்து ஏற்படும் மோதல் தான் படத்தின் மையக்கரு. அரசியல் பலம் வாய்ந்த நபர் ஒருவரின் மருமகன் மற்றும் அவனது இரண்டு நண்பர்கள். மறுபுறம் பெற்றோர் உதவி இல்லாமல் சுயமாக வாழ வேண்டும் என்று நினைக்கும் இளம் பெண்.

தன்னை விட வயதில் மிக அதிக மூத்தவருடன் உறவு வைத்திருக்கும் இன்னொரு பெண். வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்த பெண். இப்படி மூன்று இளைஞர்களும் – மூன்று பெண்களும் தான் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரம். சந்தர்ப்ப சூழலில் மூன்று பெண்களுக்கும் – அரசியல்வாதி மருமகன் மற்றும் அவனது நண்பர்களுடன் பழக வாய்ப்பு கிடைக்கும். இதனை பயன்படுத்தி ஓட்டல் ஒன்று சென்று இளைஞர்களும் இளம் பெண்களும் மது அருந்துவர்.

   போதையில் அரசியல்வாதியின் மருமகன் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்ய முயல்வார். ஆனால் அந்த பெண் அவனை அடித்து தள்ளவிட்டு தப்பிவிடுவார். பெண் அடித்ததில் காயம் அடைந்த அரசியல்வாதியின் மருமகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பான். இந்த நிலையில் அவனது இரண்டு நண்பர்களும் அந்த பெண்களிடம் கெஞ்சி வழக்குப் பதிவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்வான்.

ஆனால் ஒரு பெண் மட்டும் துணிச்சலாக அரசியல்வாதியின் மருமகன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிப்பார். மறுநாளே அவர் கடத்தப்படுவார். அப்போது அந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்துவிட்டு மீண்டும் கடத்திய இடத்திலேயே விட்டுச் சென்றுவிடுவார்கள். இந்த சம்வங்கள் அனைத்தையுமே மூத்த வழக்கறிஞர் ஒருவர் கண்காணித்துக் கொண்டிருப்பார். காரணம் அந்த மூன்று பெண்களின் வீட்டிற்கு அருகில் தான் அந்த வழக்கறிஞர் இருப்பார்.

கடத்தப்பட்ட மீண்ட நிலையில் இருக்கும் அந்த பெண்ணை விபச்சார வழக்கில் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றுவிடுவார்கள். இதன் பிறகு தான் இந்த விவகாரத்தில் அந்த மூத்த வழக்கறிஞரின் தலையீடு ஆரம்பிக்கும். விபச்சார வழக்கில் கைதான பெண்ணை தனது வாதத்திறமையில் வழக்கறிஞர் எப்படி வெளியே கொண்டு வருகிறார் என்பது தான் படத்தின் மீதிக் கதை.

   மெட்ரோ நகரங்களில் இளம் பெண்களின் வாழ்க்கை முறை மாறியதையும், அதனை இளைஞர்கள் தவறாக புரிந்து கொள்வதையும் சித்தரித்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கும். இந்த படத்தில் விபச்சார வழக்கில் கைதாகும் பெண்ணாக டாப்சி நடித்திருப்பார். அவரை காப்பாற்றும் திறமையான வழக்கறிஞராக அமிதாப் பச்சன் நடித்திருப்பார்.

அந்த வகையில் வழக்கறிஞராக அஜித் நடிக்க உள்ளார். 70 வயது வக்கீலாக நடித்த அமிதாப்பின் பாத்திரம் அஜீத்துக்காக அவரது ஒரிஜினல் வயதான 50 வயது வக்கீல் என்று மட்டும் மாற்றப்பட்டுள்ளது. டாப்சி வேடத்தில் மீண்டும் டாப்சியே நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இளைஞர்களில் ஒருவராக சிம்புவை வைத்து அன்பாவன் அசராதவன் அடங்காதவன் படத்தை எடுத்து வாழ்க்கையை தொலைத்த இயக்குனர் ஆத்விக் நடிக்க உள்ளார். 

இதுநாள் வரை ஏனோதானோ என்று மசாலாப் படங்களில் நடித்து வந்த அஜீத்துக்கு இது மறைந்த ஸ்ரீதேவியின் ரூபத்தில் கிடைத்திருக்கும் ஒரு வரம். காதல் மன்னன், மசாலா மன்னன் இமேஜ்களிலிருந்து மாற உதவும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.