சுரேஷ் சந்திரா வெறுமனே தல அஜீத்தின் மேனேஜரோ, பி.ஆர்.ஓ.வோ அல்ல. அஜித் துவக்க காலத்தில் மிகச் சிறிய டூ வீலரில் வாய்ப்பு தேடிய காலத்திலிருந்து 24 மணி நேரங்களும் உடன் இருந்தவர். அதனால் இன்றைய உச்ச நட்சத்திரமான பிறகும் சுரேஷ் சந்திராவை தனது சொந்த சகோதரன் போலவே கொண்டாடி கூடவே வைத்திருக்கிறார் அஜித்.

தனது தாய்க்கு உடல் நலமில்லை என்றவுடன் ஒரு மகன் எப்படியெல்லாம் துடித்துப்போவான் என்பதை இன்றைய சுரேஷின் முகநூல் பதிவு உணர்த்துகிறது. இப்பதிவை முழுமையாகப் படித்துவிட்டு அஜீத் ரசிகர்கள் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் பிரார்த்திக்கலாம்...

அம்மா.

இந்த ஒற்றை வார்த்தை ஒரு அகராதிக்கு சமம். பன்மொழி வித்தகரான என் அம்மா சத்யா அந்த அகராதிக்கு சவால் விடும் தன்மை பெற்றவர். முதுமையில் கூட அயராது கற்பவர். கற்றுக் கொடுப்பதை தொழிலாக கொண்டவர். ஓய்வு பெற்று 20 ஆண்டுகள் ஆன பின்னரும் தனது மாணவர்களோடு இன்னமும் தொடர்பில் உள்ளவர். மாணவர்களின் பிறந்த நாளன்று மறக்காமல், அவர்களுக்கு அலை பேசி மூலமாகவோ, முக புத்தகம் மூலமாகவோ, watsapp மூலமாகவோ வாழ்த்து சொல்வதை வாடிக்கையாக கொண்டவர். அவர்கள் அதற்கு நன்றி கூறி குறுந்செய்தி அனுப்பினால் கூட ஒரு குழந்தையின் குதூகலத்துடன் எங்களுடன் பங்கிட்டுக் கொள்வார்.

பெண்கள் dependant ஆக இருக்க கூடாது என்பதை எழுபதுகளின் ஆரம்பத்தில் இவர் கூற கேட்கும் போது இவர் எனக்கு ஒரு பெண்ணியவாதியாக தெரிந்தார். திருமணமாகி மூன்று பிள்ளைகள் பெற்ற பின்னரும் மேற்படிப்பு கல்வி பயின்ற இவரது செயல் திருமணம் பேச்சு எடுத்து விட்டாலே படிப்புக்கு முழுக்கு போடும் இன்றைய இளம் பிள்ளைகளுக்கு இவரது கல்வி வேட்கை ஒரு முன்னுதாரணம். பக்தி பழமையான இவரிடம் இருக்கும் முற்போக்கான சிந்தனைகள் எனக்கு முரண்பாடாகவே தெரிந்தது. ஆயினும் அதை ஞாயப்படுத்தும் செய்கைகள் இவருடையது. நுனி நாக்கில் ஆங்கிலம் கரை புரண்டு ஓடினாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், உருது, ஹிந்தி, பிரெஞ்ச், ஜெர்மன், படுகா, பார்சி ஆகிய மொழிகளில் சரளமாக உரையாடுவார். கம்பிளி ஆடை பின்னுதல், வரைதல், கோலம் போடுதல், பூஜை அறை அலங்கார அமைப்பு, எனக்கு மதிய உணவு pack செய்தல், தோட்டம் புணரமைத்தல் , நான் வளர்க்கும் விலங்குகளுக்கு உணவு மற்றும் மருந்து கொடுக்கும் நிர்வாகம் என்று அசராமல், அயராமல் உழைக்கும் இந்த பெண்மணிக்கு , எனக்கு சுவாசம் தந்த இந்த மேகத்துக்கு இன்று ஜூன் மாதம் 6ஆம் தேதி பிறந்த நாள்.

கடந்த சில மாதங்களாக வயோதிகம் மற்றும் உணவு ஒவ்வாமை காரணமாக உடல் நலிவுற்று இருக்கிறார். நான், என் மனைவி, என் அம்மா என்று ஒரு சின்னஞ்சிறு கூட்டுக்குள் வாழும் குருவிகளாக பாடி திரிந்த நாங்கள் இன்று தூக்கமின்றி , மன அமைதியின்றி தவிக்கிறோம். தொலைக்காட்சி பார்ப்பதில் , அதிலும் சேனல் மாற்றுவதில் எங்களுக்குள் கடுமையான சண்டை கூட வரும். நோயின் அயர்ச்சி அவரை தொலைக்காட்சி பார்க்க விடுவது இல்லை. சண்டை போட்டு வாங்காத ரிமோட் மீது எனக்கும் ஆர்வம் இல்லை. தான் ஒரு தொலைக்காட்சி என்பதை எங்கள் வீட்டு தொலைக்காட்சி மறந்து மாதங்கள் மூன்றாகி விட்டது.எனக்கு திருமண பந்தத்தின் மீது இருந்த அச்சமே மாமியார் மருமகள் உரசல் தான். அந்த உணர்வு எனக்கு இல்லாமல் செய்த என் தாய்க்கும் , என் மனைவிக்கும் கோடானு கோடி நன்றி. தனக்கு நேர்ந்தது தன் மருமகளுக்கு நேரக் கூடாதுன்னு இந்த அம்மா என் மனைவிக்கு ஒரு மாற்று தாயாகவே இருக்கிறார்...இருக்க போகிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் போது யாரோ ஒருவரை சந்திக்கலாம் என அனுமதிக்கப்பட்டபோது கூட அவர் நாடியது என் மனைவியின் அருகாமையை தான்.படிப்பு அறிவற்ற நான் ஒரு பிள்ளையாக , சிறந்த ஆசிரியை ஆக திகழ்ந்த அவருக்கு பெருமை சேர்க்க வில்லை. இன்றும் சமூகத்தில் நான் ஈன்று இருக்கும் கொஞ்சம் நஞ்சம் நற்பண்புகளும் அதை ஒட்டி வரும் நற்பெயரும் அவருக்கு பெருமை சேர்க்கும் என்பதில் எனக்கு அலாதி பெருமை. 

எம் ஜி ஆர் பாடல்கள் நித்தம் கேட்க்கும் எனக்கு அடிமை பெண் படத்தில் வரும் "தாயில்லாமல் நானில்லை" பாடலில் வரும் "தன்மை இல்லாமல் நான் மிதித்தாலும் தாய்மையிலே மனம் குளிர்ந்திடுவாள்" என்ற வரிகள் என் தாயை நினைவூட்டும். கோழி மிதித்து குஞ்சு முடமாகாது என்ற பழமொழியே பொய். எந்த தாய் கோழியும் குஞ்சு கோழியை மிதிக்காது.... குஞ்சு மிதித்து மனதால் முடமான கோழிகளே அதிகம். முடமானாலும் மன்னிக்க தெரிந்த தெய்வம் தாய்.என் தாய் கோழி என் பொறுமையின்மையை , கோபத்தை கையாள தெரிந்தவள். என் உளறல்களுக்கு செவி தானம் கொடுத்தவள்... என் கிறுக்கல்களுக்கு கூட அவரிடம் பாராட்டு கிடைக்கும். மனதிடம் அதிகம் பெற்ற அவருக்கு உடல் பலம்.குறைந்து விட்டது. மீண்டும் நடமாடுவார், என்னுடன் இரவு உணவு உண்ணும் போது என் சுக துக்கங்களை கேட்பார், காலையில் நான் வேலைக்கு புறப்படும் போது தான் கையால் முன்பை போலவே பருப்பு வகையறாக்கள் கொடுப்பார் என்று நான் நம்புகிறேன். இறை நம்பிக்கை இல்லை என சொல்லி கொள்ளும் எனக்கு நலிவுற்று இருக்கும் என் தாய்க்கு உடல் நலம் தேறி வர வேண்டும் என பிராத்திக்க அவா. காரியத்துக்காக வேண்டுகிறேன் என்று இறைவன் கோபித்து கொள்வாரா என்ற பயமும் உள்ளது. பிராத்தித்து பழகியவர்கள், பிராதிக்க தகுதியுள்ளவர்கள் என் தாயின் உடல் நலன் கருதி அவருடைய இஷ்ட தெய்வமான கிருஷ்ணரிடம் பிராத்தியுங்கள்....