அஜித்தின் அடுத்த படத்தின் கதை இதுதான்!: ஓல்டு கெட் - அப்பில்  தூள் பறத்த போகும் தல! 

விஸ்வாசம் தந்திருக்கும் வெறியான வெற்றிக்களிப்பில் இருப்பார் தல! என்று பார்த்தால் மனிதர் தன் ஹோம் தியேட்டரில் அமிதாப்பச்சனின் ‘பிங்க்’ படத்தை திரும்பத் திரும்ப போட்டு கவனித்துக் கொண்டிருக்கிறார். அவரைப் போல் நடிக்கவா? என்று கேட்டால்...’அமிதாப்பின் சாயலே விழாமல் நடிக்க!’ என்று தகவல் வருகிறது அவரது  பி.ஆர்.ஓ. சுரேஷ் சந்திராவின் சைடிலிருந்து. 

அது சரி அமிதாப்பச்சனின் படத்தை தல ஏன் பார்க்கிறார்? என்றால்...அவரது அடுத்த படமானது அமிதாப்பின் ‘பிங்க்’ படத்தின் ரீமேக் தானே! மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்க, தீரன் இயக்குநர் விநோத்தின் இயக்கத்தில், யுவன் இசையில் பக்கா பவர் பேக்ட் ஆக வந்து நிற்கப்போகிறார் தல. 

சரி ஒரிஜினல் பிங்க் படம் எப்படி?...இந்தப்படம் ஒரு சோஷியல் த்ரில்லர். அமிதாப்பின் ஃபேவரைட் இயக்குநர்களில் ஒருவரான ராய்செளத்தரி இயக்கியது. தேசிய விருது பெற்ற இந்தப்படம் 2016ல் வெளியாகியது. வெறும் 23 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் என்ன தெரியுமா?சுமார் நூற்று ஏழு கோடி. 
உணர்வும், உரிமையும், மரியாதையும் மதிக்கப்பட வேண்டும் என்பதே படத்தின் சாரம். அதுவும் பிரச்னைகளில் சிக்கும் பெண்கள் பாதுகாப்பு தேடி போலீஸிடம் வரும்போது அவர்கள் மிக முறையாக காக்கப்பட வேண்டும் என்று சொல்கிறது. இந்தப் படத்தில் தீபக் சேகல் எனும் கதாபாத்திரத்தில் ஓய்வு பெற்ற வழக்கறிஞராய் நடித்திருந்தார் அமிதாப். இந்த ரோலைத்தான் தல செய்யப்போகிறார். 


இந்தியில் சீனியர் சிங்கம் அமிதாப் கலக்கியிருப்பார் தன் வழக்கமான மெர்சல் நடிப்பில். தான் அதை தாண்ட வேண்டும் என்பதே தல!யின் கணக்கு. பாக்ஸ் ஆபீஸில் மட்டுமல்ல ரிவியூவிலும் கணிசமான வரவேற்பை பெற்ற சமூக நோக்குடைய படம்தான் ‘பிங்க்’. இங்கு எப்படி அமையப்போகிறதோ?

லாஜிக், யதார்த்தம் எல்லாத்தையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு தன் ரசிகர்களுக்கே ரசிகர்களுக்காக தல செய்த மேஜிக் ‘விஸ்வாசம்’ அநியாயத்துக்கு எல்லா தரப்பு மக்களையும் கவர்ந்தது. ஆனால் பிங்க் படமோ கனமான கதையோட்டம் உடையது. இதில் ‘அடிச்சு தூக்கு! மெரிட்டு! இஞ்சாருடா!’ என்று தல பேச முடியாது. ஆனால் இதை தெரிந்துதான் தல கால் வைக்கிறார். நல்ல கதையோட்டத்தில், ஜோடிப்பாடல் எல்லாம் இல்லாத கதையின் நாயகனாக அஜித்தை வரவேற்க அவரது ரசிக குஞ்சுகள் தயாராக இருக்க வேண்டியது அவசியம். விஸ்வாசம் போல் இந்தப் படமும் அனைத்து தரப்பையும் கவரும் வாய்ப்புள்ளது, நன்றாக இருக்கும் பட்சத்தில்.