ஏற்கனவே தல அஜித், தயாரிப்பாளரும் மறைத்த பழம்பெரும் நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதை தொடர்ந்து, மீண்டும் இரண்டாவது முறையாக 'வலிமை' படத்திற்காக இதே குழுவினருடன் கை கோர்த்துள்ளார் அஜித்.

இந்நிலையில் தற்போது வலிமை படம் குறித்து வெளியாகியுள்ள தகவலில் இந்த படத்தை 'பான் இந்தியா' திரைப்படமாக உருவாக்கும் முயற்சியில் போனி கபூர் இருப்பதாக கூறப்படுகிறது. பல மொழிகளில் ஒரே நேரத்தில் ஒரு படத்தை திரையிட்டால் வசூலை குவிக்கலாம் என்கிற நோக்கல் தான் இந்த முயற்சி எடுக்கப்படுகிறது.

அந்த வகையில் தற்போது தல அஜித்தின் ’வலிமை’ திரைப்படமும் ’பான்-இந்தியா’ திரைப்படமாக உருவாக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தமிழில் மட்டுமே எடுக்கப்படும் இந்த படத்தை, டப்பிங் கலைஞர்களை வைத்து, இந்தி உள்ளிட்ட இன்னும் சில மொழிகளில் அந்தந்த மொழி படம் போலவே டப்பிங் செய்ய தயாரிப்பாளர் போனி கபூர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

வலிமை படத்தில் 80 சதவீத படப்பிடிப்பு பணிகள் நடந்து முடித்துள்ள நிலையில், மீதம் உள்ள படப்பிடிப்பு, கொரோனா ஊரடங்கு முடிந்த பின்னர் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த இந்த படத்தின் மற்ற பணிகள், டெல்லி மற்றும் வெளிநாடுகளில் நடத்த வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. தல அஜித்தின் படம் 'பான் இந்தியா' படமாக உருவாக உள்ளது அவரது ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது.