தல அஜித் தற்போது நடித்து முடித்துள்ள 'நேர்கொண்ட பார்வை' படத்தின் தமிழக தியேட்டர் உரிமையை 75 கோடி ரூபாய்க்கு குறைவாக தர மாட்டேன் என கறாராக பேசுகிறாராம், இந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர்.

அஜித் தற்போது தன்னுடைய 59 வது படமான 'நேர்கொண்ட பார்வை' படத்தை நடித்து முடித்துள்ளார். இந்த படம், இந்தியில் அமிதாப்பச்சன் நடித்து மிகபெரிய வெற்றி பெற்ற,  'பிங்க்' படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்டுள்ளது. 

இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை வித்யாபாலன் நடித்துள்ளார். 'தீரன் அதிகாரம் ஒன்று', 'சதுரங்க வேட்டை' ஆகிய  படங்களை இயக்கியுள்ள இயக்குனர் எச். வினோத் இந்த படத்தை இயக்கியுள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் மட்டுமின்றி அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.  தற்போது அஜித் உட்பட அனைத்து நடிகர்-நடிகைகளும் டப்பிங் பணிகளை முடித்துவிட்ட நிலையில், பின்னணி இசை கோர்ப்பு பணி மும்முரமாக தொடங்கி இருப்பதாக யுவன் சங்கர் ராஜா வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அஜித் - யுவன் காம்பினேஷனில் வெளியான பில்லா 2 , ஆரம்பம், மங்காத்தா, படங்களை போல் இந்த படத்தின் பின்னணி இசையை செம்ம மாஸாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ள 'நேர்கொண்ட பார்வை' படத்திற்கான வியாபாரம் குறித்து பேச்சுவார்த்தையும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.  இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில், தமிழ்நாடு தியேட்டர் உரிமையை கைப்பற்ற ரூபாய் 70 கோடி வரை கொடுக்க முன்வந்த போதிலும், போனிகபூர் அதைவிட அதிகம் எதிர்பார்க்கிறாராம்.  

விஜய்யின் 63ஆவது படத்திற்கான உரிமை ரூபாய் 75 கோடிக்கு விலை போய் இருப்பதாக கூறப்படும் நிலையில்,  அதே தொகையான 75 கோடி ரூபாயை போனி கபூரும் எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது. அதற்கு குறைவாக படத்தின் உரிமையை கேட்டால் தர மாட்டேன் என்று கறாராக பேசுவதாக ஒரு தகவல்.