சிறுத்தை சிவா இயக்கத்தில், அஜித் நடித்து வந்த விவேகம் படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதால் குடும்பத்துடன் அஜித் ஓய்வெடுத்து வருகிறார்.

விவேகம் படத்தில் மிகவும் வித்தியாசமான கெட் அப்பில் அஜித் நடித்துள்ளதால் இந்த திரைப்படத்திற்கு, அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் அதிகமாகவே எதிர்பார்ப்புகள் இருந்து வருகிறது. 

இந்நிலையில் அஜித் திடீர் என திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று காலை நடைபெற்ற சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். நடிகர் அஜித் புதிய படத்திற்கான தொடக்கத்திலும் படம் வெளியீட்டிற்கு முன்பு ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம் அதன்படி விரைவில் விவேகம் படம் வெளியாக உள்ளதால் இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார் என அஜித் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

இவர் சாமி தரிசனம் செய்ய வந்ததை அறிந்த ரசிகர்கள் அவரிடம் வந்து கை கொடுத்த போதும், செல்பி எடுத்துக்கொள்ளும் படி கேட்டபோதும் சற்றும் முகம் சுழிக்காமல் அமைதியாக நின்று அனைவரிடமும் போட்டோ எடுத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.